உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயிருக்கு உலை வைக்கிறதா உணவுப்பழக்கம்?

உயிருக்கு உலை வைக்கிறதா உணவுப்பழக்கம்?

'திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, இதயநோய் அதிகரித்து வருகிறது' என, தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கின்றனர், மருத்துவர்கள்.பரபரப்பான தொழில் நகரில், இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலில், உழைப்புக்கு முக்கியத்துவம் தரும் மக்கள், தங்கள் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதே யதார்த்தம். 'இம்மாவட்டத்தை பொறுத்தவரை இதய நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம், போதை பழக்கம் ஆகியவை இதயநோய் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளன' என்பது தான் மருத்துவர்களின் பொதுவான கருத்து.மணிக்கணக்கில் உடல் உழைப்பில் ஈடுபடும் பெரும்பாலான மக்கள், ஓட்டல், வீடுகளில் சமைத்து உண்ண நேரமில்லாமலும், அதற்கான நேரத்தை செலவிட விரும்பாமல், ஓட்டல், சாலையோரக் கடைகளில் உணவருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களது உடல் உழைப்பு, உடல் ஆரோக்கியத்துக்கு வலு சேர்த்தாலும், அவர்களின் உணவு பழக்கம், உயிருக்கு உலை வைக்கிறது என்பது தான் மருத்துவர்களின் கருத்து.காரணம், பெரும்பாலான ஓட்டல், சாலையோரக் கடைகளில் சுத்தம், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதும், பலமுறை பயன்படுத்தப்பட்ட பாமாயில் உள்ளிட்ட பஜ்ஜி, போண்டா, சிக்கன் வறுவல் உள்ளிட்ட பொறித்த உணவுகளை தயாரித்து வழங்குவதும் உடல் நலத்துக்கு கேடு விளை விளைக்கும் என்கின்றனர், உணவு பாதுகாப்புத்துறையினர்.''இவ்வாறு, சுகாதாரமற்ற, திரும்ப திரும்ப பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் தயாரித்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொள்வதன் வாயிலாக, ரத்தக் குழாயில் கொழுப்பு ஏற்பட்டு, அது மாரடைப்பை கூட ஏற்படுத்தும். இளம் வயது மரணம் ஏற்படுவதற்கு இவை தான் முக்கிய காரணம்'' எனவும் எச்சரிக்கின்றனர்.'இந்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது' என்பதை, சமீபத்திய நாட்களில் பார்க்க முடிகிறது. அதாவது, உடலுக்கு ஊட்டச்சத்து வழங்கும் பாரம்பரிய உணவு தயாரிப்பு உணவகங்களில், கூட்டம் அதிகரித்து வருவதன் வாயிலாக, உணர்ந்து கொள்ள முடியும். ராகி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம், வாழைப்பூ உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய பொருட்களை பயன்படுத்தி, கடலை எண்ணெயில் உணவு தயாரிக்கப்பட்ட பலகாரங்கள் உள்ளிட்ட உணவுகளை தயாரித்து வழங்கும் உணவுக் கூடங்கள் பல இடங்களில் அதிகரித்து வருகின்றன.'பிற கடைகளை விட, தின்பண்டம் மற்றும் உணவுங்களின் விலை சற்று அதிகம் என்றாலும், உடல் நலத்துக்கு நல்லது என்பதால், இத்தகைய கடைகளை நாடிச்செல்ல வேண்டியிருக்கிறது' என்கின்றனர் பொதுமக்கள் சிலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ