மேலும் செய்திகள்
டாக்டர் நியமிக்க கோரி இ.கம்யூ., சார்பில் மனு
03-Feb-2025
ஜம்பையில் மக்கள் மறியல் போராட்டம்
30-Jan-2025
முன்னேறிய Tilak varma & Varun Chakravarthy
31-Jan-2025
பல்லடம்; அருள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.பல்லடம் அடுத்த, கரைப்புதுார் ஊராட்சி, அருள்புரம் பகுதியில், உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. அருள்புரம் பகுதியில், ஏராளமான தொழில் நிறுவனங்கள், சாய ஆலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பனியன் கம்பெனிகள் உள்ளன. இவற்றில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்க்கின்றனர்.இதனால், தொழிலாளர், பொதுமக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் இடமாக அருள்புரம் உள்ளது. இங்குள்ள தொழிலாளர், பொதுமக்கள் தங்களது மருத்துவ தேவைகளுக்காக, பெரும்பாலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையே நாடுகின்றனர்.உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காலை முதல் மாலை வரை மட்டுமே செயல்படுகிறது. கர்ப்பிணிகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் இங்கு பயன் பெறுகின்றனர். பல்லடம் - -திருப்பூருக்கு இடையே அருள்புரம் உள்ளதால், கூடுதல் மருத்துவ சிகிச்சைகள் பெற, இப்பகுதி மக்கள், பல்லடம் அல்லது திருப்பூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், தேவையற்ற பொருட்செலவு மற்றும் நேர விரையம் ஏற்படுகிறது.மேலும், இரவு நேரங்களில், மருத்துவ தேவைகளை பெற முடியாமல் தொழிலாளர், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பொதுமக்கள் பயனடையும் வகையில், உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தரம் உயர்த்த வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பின், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது.இதேபோல், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்களை நியமிப்பதுடன், அவர்கள் இங்கேயே தங்கி வேலை பார்க்கும் வகையில், குடியிருப்புகளையும் கட்டி, 24 மணி நேர சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
03-Feb-2025
30-Jan-2025
31-Jan-2025