குப்பை மேட்டில் டாலர் சிட்டி : சினிமா ஷூட்டிங்கால் பரபரப்பு
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட, கரைப்புதூர் - உப்பிலிபாளையம் செல்லும் ரோட்டில், ஊராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, ஊராட்சியின் ஒட்டுமொத்த குப்பைகளும், கழிவுகளும் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. துர்நாற்றம் வீசி வரும் இந்த குப்பை கிடங்குக்கு அருகில் செல்லக் கூட பலரும் யோசிப்பர். இந்த குப்பை கிடங்கில், நேற்று, டிராக்டர், பொக்லைன் உள்ளிட்டவை நின்றிருக்க, கேமரா, லைட்டிங் என, பரபரப்பாக காணப்பட்டது. என்ன என்று பார்ப்பதற்காக, பொதுமக்கள் பலரும் குப்பை கிடங்கில் கூடினர். நீண்ட நேரத்துக்கு பின்னரே, குப்பை கிடங்கில் ஷூட்டிங் நடப்பது தெரியவந்தது. புதுமுகங்கள் நடிக்கும், 'டாலர் சிட்டி' என்ற பெயரில் சினிமா ஷூட்டிங் நடத்தப்பட்டு வந்தது. குப்பைகள், கழிவுகளின் துர்நாற்றத்துக்கு இடையே, ஷூட்டிங் நடப்பதை பொதுமக்கள் பலரும் வேடிக்கை பார்த்தனர். இதனால், கரைப்புதுார் குப்பை மேடு நேற்று பரபரப்பாக காணப்பட்டது. --- கரைப்புதுார் குப்பைக்கிடங்கில் நேற்று 'டாலர் சிட்டி' என்ற சினிமா பட ஷூட்டிங் நடந்தது.