உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  காலை உணவு திட்ட விவரம் பதிவிடுவதில் தாமதம் கூடாது

 காலை உணவு திட்ட விவரம் பதிவிடுவதில் தாமதம் கூடாது

திருப்பூர்: முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவருக்கு காலை உணவு பள்ளிகளில் வழங்கப்படுகிறது. துவக்கத்தில் அதிகளவில் மாணவ, மாணவியர் திரண்டு வந்த நிலையில், தற்போது குறைந்தளவு மாணவரே திட்டத்தின் கீழ் உணவு அருந்துவதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால், 2026ம் கல்வியாண்டில், திட்டத்தின் செயல்பாட்டுக்கு ஏற்ப தான் நிதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் இருந்து, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் பணிபுரியும் ஒருங்கிணைந்த சமையலறை பொறுப்பாளர், சம்மந்தப்பட்ட மைய பொறுப்பாளர், பள்ளி பொறுப்பாளர் உள்ளிட்டோர், 'காலை உணவுத்திட்டத்தின் பயன்பெறும் மாணவ, மாணவியர் விபரங்களை சரிவர உள்ளீடு செய்ய வேண்டும்; தாமதம் தவிர்க்கப்பட வேண்டும். சரியான விபரங்களை உள்ளீடு செய்தால் மட்டுமே நிதி ஒதுக்கீட்டில் பிரச்னை இருக்காது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட மற்றும் தொடக் கல்வி அலுவலர்கள் சரியான விபரங்களை, தாமதமின்றி பதிவேற்றம் செய்ய காலை உணவுத்திட்ட பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். திடீர் அறிவுறுத்தல் ஏன்? நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள மையங்களில் பதிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியரை விட குறைவான அளவு, மூன்றில் ஒரு பங்கு மாணவ, மாணவியரே காலை உணவு சாப்பிடுவதாக, மாநிலம் முழுதும் விபரங்கள் சமீபத்தில் 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிகளில் இருந்தும் தரவுகள் தாமதமாகவே பதிவேற்றப்படுகிறது. இதனால், துல்லியம் அறிய முடியாமல், வரும் கல்வியாண்டு ஒதுக்கீடு குறித்து இறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே தான், விவரங்களை சரிவர வழங்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !