திருப்பூர்: பாய்லர் மீது வைத்து பால் பாக்கெட்டுகளை சூடுபடுத்தினால், நுகர்வோரின் உடல் நலம் பாதிக்குமென, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.பேக்கரி மற்றும் டீக்கடைகளில், பால் பாக்கெட்டுகளை, பாய்லர் மீது வைத்து சூடுபடுத்துவதாக, நுகர்வோர் தரப்பில் இருந்து புகார் எழுந்தது. கலெக்டர் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நகரப்பகுதியில் உள்ள பேக்கரி, டீக்கடைகளில் நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினர்.சூடான பாய்லர் மீது வைத்து, பால் பாக்கெட்களை சூடுபடுத்துவது கண்டறியப்பட்டது. அவ்வாறு சூடுபடுத்திய, 18 லி., பால் பாக்கெட், கலப்பட டீத்துாள், 3.30 கிலோ அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டது.பேக்கரிகளில் ஆய்வு நடத்திய போது, காலாவதியாகும் தேதி, தயாரிப்பு தேதி இல்லாத இனிப்பு மற்றும் கார வகைகள், ஏழு கிலோ, கெட்டுப்போன பழங்கள் மற்றும் காய்கறிகள் மூன்று கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.சுகாதாரக்குறைபாடு மற்றும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்படுத்திய, 24 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.பாய்லர்கள் மீது, பால் பாக்கெட்களை வைத்து சூடு செய்யும் போது, பாலிதீன் கரைந்து, பாலுடன் கலந்து நுகர்வோருக்கு உடல் நல குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, பாய்லர் மீது பால் பாக்கெட்களை வைத்து சூடு செய்யக்கூடாது. இனிப்பு மற்றும் பலகாரங்களை, செய்தித்தாளில் வைத்து சாப்பிடக் கொடுக்கக் கூடாது என்று கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.தினமும் லட்சக்கணக்கான மக்கள் பேக்கரி, டீக்கடைகளில், டீ குடிக்கின்றனர். இந்நிலையில், பால் பாக்கெட்களை சூடுபடுத்துவதால் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, கடை உரிமையாளர் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; கடைகளில், அடிக்கடி ஆய்வு நடத்தப்பட வேண்டுமென, தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.