கனவாகும் பதக்கங்கள்!
விளையாட்டில் சாதிக்க கிராம மாணவர்களுக்கு... நவீன மைதானம் அமைக்க தொடர் கோரிக்கைஉடுமலை; கிராமப்புற மாணவர்களும் மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதிக்க உடுமலையில், நவீன வசதிகளை உள்ளடக்கிய ஹாக்கி மற்றும் தடகள போட்டிகளுக்கான மைதானத்தை அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் கடந்த 2009ல், உருவாக்கப்பட்டது. மாவட்டத்தில், 1,100க்கும் அதிகமான துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இப்பள்ளிகளில், பல ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில், இயல்பாகவே திறமைகளை கொண்டுள்ளனர்.ஆனால், இவர்களுக்கு போதுமான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் ஆகியவை எட்டாக்கனியாகவே உள்ளது.திறமை இருந்தும் முறையான பயிற்சி இல்லாததால், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகளில், கூட திருப்பூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற போராட வேண்டியுள்ளது.குறிப்பாக, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களை உள்ளடக்கிய, உடுமலை வருவாய் கோட்ட பள்ளிகளில், பல மாணவ, மாணவியர், ஹாக்கி மற்றும் தடகள போட்டிகளில், திறன்பெற்றவர்களாக உள்ளனர். பிரதான விளையாட்டு
ஹாக்கிப்போட்டியில், தேசிய, மாநில அளவிலான அணிகளில், உடுமலை பகுதியை சேர்ந்த பல மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.நீண்ட காலமாக, ஹாக்கி உடுமலை பகுதியில், பிரதான விளையாட்டாக உள்ளது.ஆனால், இப்பகுதி ஹாக்கி வீரர்கள் பயிற்சி பெற, எவ்வித வசதிகளும் இல்லை. மாநில, தேசிய அளவிலான போட்டிகளில், செயற்கை புல்தரையில் விளையாட வேண்டும். இத்தகைய மைதானம் திருப்பூர் மாவட்டத்தில் இல்லை.மண் தரையில், விளையாடி பயிற்சி பெறும் மாணவர்கள், இளைஞர்கள், செயற்கை புல்தரையில், விளையாட திணற வேண்டியுள்ளது.உடுமலை நேதாஜி மைதானம் அல்லது அரசுப்பள்ளி வளாகத்தில், செயற்கை புல்தரை உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்ட மைதானத்தை ஏற்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தொடர் கோரிக்கை மனுக்களையும் அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.இதேபோல், தடகள போட்டிகளிலும், கிராமப்புற மாணவ, மாணவியர் அதிக ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.குறுமைய அளவிலான போட்டிகளில் சாதிக்கும் மாணவ, மாணவியர், அடுத்த கட்ட போட்டிகளில் வெற்றி பெற போதிய பயிற்சி கிடைப்பதில்லை. ஆசை நிறைவேறுமா?
திருப்பூர் மாவட்டத்தில், செயற்கை ஓடுதளம் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட மைதானம் இல்லாததால், கோவைக்கு சென்று பயிற்சி பெற வேண்டியுள்ளது.அதிக பொருட்செலவு, அலைச்சல் உள்ளிட்ட காரணங்களால், கோவைக்கு செல்ல மாணவ, மாணவியரும், பெற்றோரும் தயக்கம் காட்டுகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வாக, அதிக அரசுப்பள்ளிகளை உள்ளடக்கிய உடுமலை பகுதியில், செயற்கை ஓடுதளம் போன்ற வசதிகளை கொண்ட மைதானத்தை ஏற்படுத்த வேண்டும்.தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தேவையான பயிற்சியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போதிலிருந்து, விளையாட்டு துறைக்கு, குறைந்தளவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் தரப்பில், வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், உடுமலை பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நவீன வசதிகளை கொண்ட மைதானம் அமைக்க வேண்டும்.இவ்வாறு நவீன மைதானம் அமைக்கும் வரை, வீரர்கள் பதக்கங்கள் பெறுவது கனவாக இருந்து வரும். மைதானம் அமைத்தால், மாநில, தேசிய, சர்வதேச அளவிலான வீரர்களை திருப்பூர் மாவட்டத்தில் குறிப்பாக, கிராமப்புறங்களில் இருந்து உருவாக்க முடியும் என விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.