டிரைவருக்கு சிறை தண்டனை; கூடுதல் கோர்ட் உறுதி செய்தது
திருப்பூர்; சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் டிரைவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை கூடுதல் மாவட்ட கோர்ட் உறுதிப்படுத்தியது. அவிநாசியை சேர்ந்தவர் காளியப்பன், 51. தண்ணீர் லாரி டிரைவர். இவர் கடந்த, -2014ல், அவிநாசியை அடுத்த ராயர்பாளையம் பிரிவு அருகே லாரியை ஓட்டிச் சென்றார். அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், 25, என்பவர் ரோட்டோரம் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். காளியப்பன் அதிவேகமாக ஓட்டி வந்த தண்ணீர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து ஜெகதீஷ் மீது மோதியது. இதில் அவர் உயிரிழந்தார். அவிநாசி போலீசார், வழக்குப் பதிவு செய்து காளியப்பனைக் கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை அவிநாசி ஜே.எம்., கோர்ட்டில் நடந்தது. இதில், காளியப்பனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து காளியப்பன், திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, அப்பீல் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், அவிநாசி ஜே.எம்., கோர்ட் காளியப்பனுக்கு விதித்த தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார்.