முருங்கை சீசன் துவங்கியது; சைவ பிரியர்கள் மகிழ்ச்சி
பொங்கலுார்; முருங்கைக்காய் இல்லாவிட்டால் சாம்பார் மணக்காது என்பதால் பலர் அந்த காய்களை விரும்புகின்றனர். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பருவமழை தீவிரமானதால் பூக்கள் உதிர்ந்து முருங்கை வரத்து அடியோடு நின்று விட்டது.கார்த்திகை மாதத்துக்கு பின் மழை ஓய்ந்ததால் முருங்கை பூக்க துவங்கியது. தற்பொழுது உள்ளூர் முருங்கை காய்கள் அறுவடைக்கு வந்துள்ளது. பங்குனி மாதம் முருங்கைக்கு சீசன் காலம் ஆகும்.தற்பொழுது சந்தைக்கு உள்ளூர் முருங்கை வரத்து அதிகரித்துள்ளது. இதுவரை வெளி மாநில முருங்கைக்காய் மட்டுமே மிகக் குறைந்த அளவு சந்தைக்கு வந்தன. இதனால், கிலோ, 100 முதல், 200 ரூபாய் வரை விற்பனையானது. தட்டுப்பாடு காரணமாக முருங்கை பிரியர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.தற்பொழுது உள்ளூர் முருங்கை சீசன் துவங்கி உள்ளதால் மரம் முருங்கை கிலோ, 20 ரூபாய்க்கும், கரும்பு ரகம் 35 ரூபாய்க்கும் விலை போகிறது. திருப்பூர் சந்தையில் ஒரு காய் இரண்டு ரூபாய் முதல் நான்கு ரூபாய் வரை விலை போகிறது.இனி வரும் நாட்களில் முருங்கை வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் முருங்கை விலை குறையும். இதுவரை வரத்து இல்லாததாலும், விலை உச்சத்தில் இருந்ததாலும் முருங்கை கிடைக்காமல் தவித்து வந்த முருங்கை பிரியர்கள் சீசன் துவங்கியுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.