உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முயற்சி திருவினை ஆக்கும்! புதிய மாற்றம் - வாய்ப்புகளை நோக்கி... பின்னலாடை துறை பயணிக்க வேண்டும் 

முயற்சி திருவினை ஆக்கும்! புதிய மாற்றம் - வாய்ப்புகளை நோக்கி... பின்னலாடை துறை பயணிக்க வேண்டும் 

திருப்பூர்: சர்வதேச அரசியல் சூழ்நிலை மாற்றத்தால், புதிய ஆர்டர் வரத்து கிடைப்பது தற்காலிகமானது; பசுமை சார் உற்பத்தி சாதனைகளை ஆதாரமாக கொண்டு, புதிய வாய்ப்புகளை நிரந்தர ஆர்டர்களாக மாற்ற, திருப்பூர் தொழில்துறையினர் சூளுரை ஏற்க வேண்டும்.திருப்பூர் பின்னலாடை வர்த்தகம், உலக அளவில், 25 நாடுகளுடன் தொடர்புடையது. சர்வதேச சந்தைகளில், சீனா, வங்கதேசத்துக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் சூழல் மாற்றத்தால், அந்நாட்டுக்கான வர்த்தக ஆர்டர்கள், இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளன.பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், கடந்த எட்டு மாதங்களாக நல்ல வளர்ச்சி நிலை உருவாகியுள்ளது. இது, திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி மற்றும் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்திக்கு கிடைத்த பரிசு என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு சென்று கொண்டிருந்த ஆர்டர்கள், நிலையான அரசியல் ஸ்திரம் கொண்ட இந்தியாவுக்கு மாறியுள்ளது; இது, தற்காலிகமானதுதான். இருப்பினும், பசுமை சார் உற்பத்தி சாதனைகளை வெளிப்படுத்தியதன் விளைவாகவே, பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், இந்தியாவை நோக்கி வரத்துவங்கியுள்ளனர்.இதுகுறித்து பனியன் தொழில்துறையினர் கூறியதாவது:இரண்டு ஆண்டுகளுக்கு பின், கடந்த தை பண்டிகையில் தான், தொழிலில், இயல்புநிலை திரும்பியது. இந்தாண்டு பண்டிகையின் போது, அபார வளர்ச்சி நிலை அடைந்துள்ளோம். சில நாடுகளில் அரசியல் சூழல் பாதிக்கப்பட்தால், நமக்கு புதிய ஆர்டர் வரத்து அதிகரித்துள்ளது தற்காலிகமானது. அவற்றை நிரந்தரமாக மாற்ற நாம் தயாராக வேண்டும். காற்றாலை மின் உற்பத்தி, மரம் வளர்ப்பு, சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு, மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு தொழில்நுட்பங்கள், சோலார் மின்கட்டமைப்பில், திருப்பூர் முன்னோடி நகரமாக உள்ளது. பல்வேறு வளர்ந்த நாடுகள், இதுபோன்ற பசுமை சார் உற்பத்தியை மட்டுமே எதிர்பார்க்கின்றன.வளர்ந்த நாடுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், திறன்மிகு திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி சாதனைகளை ஆவணமாக்க வேண்டும். அத்தகைய ஆவணத்தை, அனைத்து நாடுகளும் அறியும்வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், அத்தகைய முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இந்தாண்டில் இருந்து சிறப்பு கவனம் செலுத்தினால், திருப்பூருக்கு புதுவசந்தம் ஏற்படுவது நிச்சயம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். -------------------------------முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும். (குறள் - 616)

ரூ.ஒரு லட்சம் கோடி 'லட்சியம்'

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது போல், இம்மாதத்தல் இருந்து திருப்பூர் பின்னலாடை தொழில்துறைக்கு புதிய திருத்தம் ஏற்படும். பல்வேறு சாதகமான சூழல் நிலவுவதால், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம் வெகுவிரைவில் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை அடையும்; அடுத்த சில ஆண்டுகளுக்குள், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ஒரு லட்சம் கோடி என்ற இலக்கை எட்டிப்பிடிக்கும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ