சாலை விபத்து தடுக்க முனைப்பு; அதிகாரிகள் அதிரடி ஆய்வு
திருப்பூர்; அவிநாசி பகுதியில், சேலம் - கோவை பைபாஸ் ரோட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக அதிரடி ஆய்வை அதிகாரிகள் மேற்கொண்டனர்.திருப்பூர் மாவட்டத்தில் விபத்து மற்றும் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் கலெக்டர் தலைமையில் அனைத்து துறையினரும் பங்கேற்று ஆலோசனை செய்து வருகின்றனர்.அவிநாசி பகுதியில் சேலம் - கோவை பைபாஸ் ரோட்டில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. உயிர்ப்பலிகளும் ஏற்படுகின்றன. இப்பகுதியில், விபத்துக்கு வாய்ப்புள்ள இடங்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.அதில், பல்லகவுண்டன்பாளையம் முதல் தெக்கலுார் வரை விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பொடாரம்பாளையம் பிரிவு, பெருமாநல்லுார் பிரிவு, அப்பியாபாளையம் பிரிவு, நியூ திருப்பூர் நேதாஜி பார்க் தடுப்பு சுவர் பகுதி, பழங்கரை பாலம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.கலெக்டர் கூறியதாவது:விபத்துக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் ரோடு இணையும் பகுதிகளில் வேகத்தடை அமைக்கவும், இரவு நேரங்களில் வேகத்தடை தெரியும் வண்ணம் எதிரொளிப்பான் அமைக்கவும், வேகத்தடை உள்ளதால் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலங்களின் ஓரங்களில் எதிரொளிப்பான் அமைக்க வேண்டும்; பழுதடைந்துள்ள விபத்து தடுப்பு கட்டமைப்புகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.முக்கிய சந்திப்புகளில் வாகன ஓட்டிகள் அறியும் வண்ணம், வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத்தடை ஏற்படுத்த வேண்டும். பைபாஸ் நுழைவு பகுதி மற்றும் வெளியேறும் பகுதிகளில் வாகன ஓட்டிகள் எளிதாக செல்லும் வகையில் மின் விளக்குகள் அமைத்து வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
குறைந்தது உயிரிழப்பு
மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கை மூலம் கடந்த, மூன்று ஆண்டுகளை காட்டிலும், தற்போது விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளது. விபத்தை தடுக்கும் வண்ணம் தேவையான சாலை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.- கலெக்டர்.