மின்சார மானியம் வழங்க வேண்டும்! பவர்டேபிள் சங்கத்தினர் எதிர்பார்ப்பு
திருப்பூர் : தமிழக அரசு, விசைத்தறிகளுக்கு வழங்குவதுபோன்று, பவர்டேபிள் நிறுவனங்களுக்கும் மின்சார மானியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க மகாசபை கூட்டம், லட்சுமி நகரிலுள்ள குலாலர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் நந்த கோபால் தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சுந்தரம், வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்தார். புதிய நிர்வாகிகள் தேர்வில், தலைவராக நந்தகோபால், துணை தலைவர் நாகராஜன், செயலாளர் முருகேசன், துணை செயலாளர் கருப்புசாமி, பொருளாளர் சுந்தரம் மற்றும் 18 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். கடந்த 2022, ஜூன் மாதம், 'சைமா' சங்கத்துடன் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தப்படி, நடப்பாண்டுக்கான, 7 சதவீத பவர்டேபிள் கட்டணம் உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். திருப்பூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ., மருத்துவ மனையில், நவீன மருத்துவ உபகரண வசதிகளை ஏற்படுத்தி, சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். தமிழக அரசு, விசைத்தறி துறையினருக்கு அளிப்பதுபோலவே, பவர்டேபிள் நிறுவனங்களுக்கும் மின்சார மானியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.