தேர்வு விடுமுறையில் பள்ளிகளின் பாதுகாப்புக்கு வலியுறுத்தல்
உடுமலை ;முழு ஆண்டு தேர்வு விடுமுறையில், அரசுப்பள்ளிகளின் பாதுகாப்புக்கு, ஊராட்சி நிர்வாகங்கள் பொறுப்பேற்க வேண்டும் என, பள்ளி மேலாண்மைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை கோட்டத்தில், இருநுாறுக்கும் அதிகமான துவக்கம் முதல் மேல்நிலை வரை அரசு பள்ளிகள் உள்ளன.ஒவ்வொரு பள்ளிகளிலும், லேப்டாப், ஸ்மார்ட் கிளாஸ், விளையாட்டு தளவாடங்கள், 'டிவி', மேஜை நாற்காலி என பல்வேறு விலை மதிப்புள்ள பொருட்கள் உள்ளன. அரசு பள்ளிகளில் உள்ள முக்கிய பிரச்னைகளில், பாதுகாப்பின்மையும் முதன்மையானதாக உள்ளது.விடுமுறை நாட்களில், சமூக விரோதிகள், பள்ளி வளாகத்தில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்துவது, அசுத்தம் செய்வது, மது அருந்திவிட்டு செல்வது போன்ற நடவடிக்கைகள், இன்னும் பெரும்பான்மையான பள்ளிகளில் தொடர்ந்து நடக்கிறது.பள்ளியை சுற்றியிருப்பவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால், பள்ளி நிர்வாகத்தினரும், இப்பிரச்னைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.இரவுக்காவலர்கள் என அரசு பள்ளிகளுக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் உள்ளாட்சி நிர்வாகங்கள், பள்ளியின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டுமென, பள்ளி மேலாண்மைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.