அரசு துவக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி
உடுமலை,; அரசு துவக்கப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்விக்கு முக்கியத்துவம் தர, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, அரசுப்பள்ளிகளில் துவங்கியுள்ளது. மாணவர்கள், ஆங்கிலம் அறிந்திருப்பதுடன் அம்மொழியில் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது தான், தற்போதைய சூழலில் பெற்றோரின் விருப்பமாக உள்ளது.இதனால் அரசுப்பள்ளிகளிலும், ஆங்கில வழியில் தங்களின் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையான துவக்கப்பள்ளிகளில், இந்த வாய்ப்பு குறைவாக உள்ளது. 'எண்ணும் எழுத்தும்' நடைமுறையில் தற்போது பாடம் கற்பிக்கப்படுவதால், ஆசிரியர்கள் கூடுதலாக ஆங்கில வழியை எடுத்து நடத்த தயங்குகின்றனர்.இதன் விளைவாக, குறிப்பிட்ட தொலைவில் இருக்கும் இரண்டு அரசுப்பள்ளிகளில், ஆங்கில வழி இருக்கும் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை மிக அதிகமாகவும், இல்லாத பள்ளியில் மிக குறைவாகவும் சேர்க்கை பதிவாகிறது.பெற்றோரிடம் சிறந்த வரவேற்பு, பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு தேவை, மாணவர் சேர்க்கைக்கான வாய்ப்புகள் என அனைத்தும் இருந்தும், அந்த பள்ளியை விடுத்து வேறு அரசு பள்ளிக்கு செல்வதற்கு முக்கிய காரணமாக, ஆங்கிலவழிக்கல்வி உள்ளது.பல பள்ளிகளில், புதிய கல்வியாண்டுக்கான சேர்க்கையில் ஆங்கில வழிக்கல்வியை கேட்டு பதிவு செய்பவர்கள்தான் அதிகம் வருவதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையால், ஆங்கில வழிக்கல்வி உள்ள பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கிறது. இதனால் அவர்களுக்கு வகுப்பறை பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.பெரும்பான்மையான அரசு துவக்கப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி கொண்டுவருவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.