உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிலத்தடி நீர் செறிவூட்டினால் பல்லடத்துக்கு வளம்

நிலத்தடி நீர் செறிவூட்டினால் பல்லடத்துக்கு வளம்

பல்லடம்: பல்லடத்தை வளமாக்கக்கூடிய ஏதாவது ஒரு திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. என, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் கோரும் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. பல்லடம் வட்டாரத்தில், விவசாயம் கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. இயற்கையாகவே, பல்லடம் வறட்சி மிகுந்த பகுதி. மழை மறைவு பிரதேசமான பல்லடம் வட்டார பகுதியில், நிலத்தடி நீர்மட்டம், 1,500 அடிக்கு மேல் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை மற்றும் பி.ஏ.பி., பாசன நீரும்தான் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக உள்ளது. குளங்கள் காய்ந்தன அதிலும், வட்டாரத்தின் மேற்குப் பகுதி கிராமங்களில் பி.ஏ.பி., பாசன வசதி இல்லாததால், மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. சராசரி அளவு பருவமழை பெய்த போதும், குளம் குட்டைகள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டே காணப்படுகின்றன. ஏதாவது ஒரு நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே, பல்லடம் பகுதி வறட்சியில் இருந்து தப்பிக்கும் என்ற சூழல் உள்ளது. இதற்காக, கடந்த காலத்தில், பி.ஏ.பி., பாசன விரிவாக்கம் கோரும் இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. இதனை செயல்படுத்த நீண்ட காலம் தேவைப்படும் என்பதால், அதுவரை பல்லடத்தை காப்பாற்றியாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இக் கோரிக்கையை வலியுறுத்தி பல்லடம் பகுதி நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டம் கோரும் இயக்கம் துவங்கப்பட்டது. பல்வேறு யோசனைகள் அதன் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது: பல்லடம் பகுதியில் நிலத்தடி நீர் செறிவூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விவசாய சங்க அமைப்பினர், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் மற்றும் பாசன விவசாயிகள் உள்ளிட்ட பலரும் இணைந்த 'பல்லடம் பகுதி நிலத்தடி நீர் செறிவூட்டல் கோரும் இயக்கம் துவங்கப்பட்டது. ஏதாவது ஒரு திட்டத்தை செயல்படுத்தி பல்லடம் பகுதியில் நிலத்தடி நீர் செறிவூட்டியாக வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இந்த இயக்கம் துவங்கப்பட்டது. தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில், ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள அத்திக்கடவு- - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை, பல்லடம் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதேபோல், சூலுார் குளத்தில் உபரி நீரை பயன்படுத்துவது மற்றும் நொய்யலை துார்வாருவது உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதுபோன்ற ஏதாவது ஒரு திட்டத்தின் வாயிலாக, பல்லடம் பகுதியில் உள்ள நீர் நிலைகளை நிரப்பும் பட்சத்தில், நிலத்தடி நீர்மட்டம் தானாக உயர்ந்து விடும். இக்கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர்கள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து மனு அளித்து வருகிறோம். எதிர்வரும் காலத்திலாவது, பல்லடத்தை வளமாக்கும் ஒரு திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி