இ.எஸ்.ஐ., திட்ட பயனாளி குடும்பத்திற்கு நிதி உதவி
உடுமலை : உடுமலை இ.எஸ்.ஐ., அலுவலகத்தில், பணியின் போது இறந்த பேப்பர் மில் தொழிலாளி குடும்பத்திற்கு சார்ந்தோர் உதவி தொகை வழங்கப்பட்டது.மடத்துக்குளம் தாலுகா, குப்பம்பாளையத்தைச்சேர்ந்த மணிவண்ணன்,52. அவர், சங்கராம நல்லுாரில் உள்ள தனியார் பேப்பர் மில்லில், செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இ.எஸ்.ஐ., சட்டத்தின் கீழ், காப்பீட்டாளராக இருந்து வந்தார்.இந்நிலையில், கடந்தாண்டு மார்ச் 7ல், பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஒரு காப்பீட்டாளர் பணியின் போது அல்லது சாலை விபத்தின் போது இறந்தால், இ.எஸ்.ஐ., திட்டத்தின் தொழில் சார்ந்த விபத்தாக கருதப்பட்டு, காப்பீட்டாளரை சார்ந்துள்ள குடும்பத்திற்கு சார்ந்தோர் உதவி பயன் வழங்கப்படுகிறது.இறந்த காப்பீட்டாளரின் மனைவி மற்றும் பெற்றோருக்கு, வாழ் நாள் முழுவதும், ஆண் குழந்தைகளுக்கு, 25 வயது வரையும், பெண் குழந்தைகளுக்கு திருமணம் ஆகும் வரையும் சார்ந்தோர் உதவி பயன் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.அதன் அடிப்படையில், இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் காப்பீட்டாளராக இருந்ததால், கோவை துணை மண்டல இணை இயக்குனர் ரவிக்குமார், துணை இயக்குனர் பெருமாள் உத்தரவு அடிப்படையில், தொழில் சார்ந்த விபத்தாக கருதி உதவி தொகை வழங்கப்பட்டது. மணிவண்ணன் குடும்பத்தினருக்கு, சார்ந்தோர் உதவி வழங்க ஆணை வழங்கும் நிகழ்ச்சி உடுமலை கிளை அலுவலகத்தில் நடந்தது.உடுமலை இ.எஸ்.ஐ., கிளை அலுவலக மேலாளர் சரவண பிரசாத், மணிவண்ணன் குடும்பத்திற்கு சார்ந்தோர் உதவி பயன் பெறுவதற்கான அனுமதி ஆணை மற்றும் சார்ந்தோர் உதவி பயன் தொகையாக ரூ. 2 லட்சத்து, 25 ஆயிரத்து 347 வழங்கினார்.இதில், காசாளர் லால்சங்கர், அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.