ஸ்ப்ரீ - 2025 திட்டத்தில் இ.எஸ்.ஐ. பதிவு எளிது
திருப்பூர்: மத்திய அரசு சார்பில், 'ஸ்ப்ரீ -2025' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு, ஜூன் 1ல் துவங்கி டிச. 31 வரை செயல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டது. இ.எஸ்.ஐ., திட்டத்தில் தொழிலாளர்களையும், தொழில் நிறுவனங்களும் இணைய இத்திட்டம் சரியான வாய்ப்பை வழங்கியது. முந்தைய ஆண்டுகளின் விவரங்களை கேட்காமல், வழங்கிய அவகாசத்தில், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை இணைக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. தகுதியான தொழிலாளர்கள் இருந்தும், இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணையாமல் இருந்த நிறுவனங்கள், எவ்வித அபராதமோ, கூடுதல் கட்டணமோ செலுத்தாமல், புதிதாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திட்டம் வாயிலாக, 10க்கும் அதிகமான தொழிலாளர்களை கொண்ட கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், எளிதாக இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணையலாம். இ.எஸ்.ஐ., திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள், இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைந்து பணி பாதுகாப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில், 'ஸ்ப்ரீ -2025' திட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த, ஜூன் மாதத்தில் இருந்து, ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். வரும் 31ம் தேதியுடன், இத்திட்ட அறிவிப்பு முடிகிறது. இதுவரை, இ.எஸ்.ஐ., பதிவு செய்யாத நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள், தொழிற்கூடங்கள், தங்களுக்கும், தங்கள் தொழிலாளர்களுக்கும், இ.எஸ்.ஐ., பதிவு செய்து பயன்பெறலாம். குறிப்பாக, முந்தைய காலகட்ட ஆவணம் எதுவும் கோரப்படாது; இதனால், புதிதாக பதிவு செய்து, சமூக பாதுகாப்பை பெறலாம். அரிய வாய்ப்பை நிறுவனங்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்,' என்றனர்.