உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஒரு உயிரினம் அழிந்தாலும் மக்களுக்கு சிக்கல் தான்

 ஒரு உயிரினம் அழிந்தாலும் மக்களுக்கு சிக்கல் தான்

திருப்பூர்: ''ஒரு உயிரினம் அழிந்தால் மற்றொரு உயிரினம் பெருகி மக்களுக்கு சிக்கல் உருவாகும்,'' என, சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம் பேசினார். திருப்பூர், மங்கலம் அருகேயுள்ள கவுசிகா நதிக்கரையில், நுால் அறிமுகம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவை சதாசிவம் எழுதிய, 'குறுநரிகள் வாழ்ந்த காடு' என்ற புத்தகத்தை, சக்தி அறக்கட்டளை நிர்வாகி மிருதுளா அறிமுகம் செய்து பேசினார். முள்ளெலிகள் என்ற நுாலை, கவிஞர் குணசுந்தரி அறிமுகம் செய்து பேசினார். கோவை சதாசிவம் பேசியதாவது: நகரம், ஊராட்சிகள் சார்ந்துள்ள அனைத்தும், சமவெளி சூழல் மண்டலமாக அமைந்துள்ளது. முள்ளெலி மற்றும் குறுநரிகள் இன்று இல்லை. குறுநரிகளில், 90 சதவீதம் அழிக்கப்பட்டதன் விளைவாக, மயில்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. நகர்ப்புறங்களில் கூட மயில்களை பார்க்கும் அளவுக்கு பெருகிவிட்டன. முள்ளெலிகள் இயற்கையில் மிக முக்கிமானவை. 90 சதவீதம் அழிந்துவிட்டன. முள் எலிகளின் அற்புதமான பயன் என்ன என்பதை அறிய வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் ஈரமான நிலத்தில், புல் முளைத்ததும், ஏராளமான புழு, பூச்சிகள் உருவாகின்றன. வண்டின் மேல் ஓடு இரும்பு போல் கெட்டியாக இருக்கும். அவற்றை, பூச்சி உண்ணும் பறவைகள் சாப்பிட முடியாது. மேலோட்டை செரிமானம் செய்யும் அளவுக்கு செரிமான உறுப்பு இல்லை. முள் எலிகளுக்கு அத்தகைய செரிமான உறுப்புகள் உள்ளன. முள்ளெலிகள் இருந்தால், வண்டுகள் பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்தது. பாம்புகள், எலிகளை கண்டால் விழுங்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாம்பை பார்த்தால், முள் எலிகள் பிடிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. விஷதேள்களை பிடித்து சாப்பிடும்; ஓட்டில் பதுங்கினாலும் நத்தைகளை விரும்பி சாப்பிடும். இத்தகைய உயிரினங்களை சமன்பாட்டில் வைக்கும் அற்புதமான உயிரினம் முள் எலிகள்; அவற்றையும் பாதுகாக்க வேண்டும். குறுநரிகளையும் பாதுகாக்க வேண்டும். ஒரு உயிரினம் அழிந்தால் மற்றாரு உயிரினம் பெருகி மக்களுக்கு சிக்கல் உருவாகும். உயிரின வரிசையில் கடைசியாக இருக்கும் மனிதன்தான், உயிரின அழிவில் முதல் ஆளாக பாதிக்கப்படுகிறான். அரிய உயிரினங்கள் அழியாமல் பாதுகாப்பது நமது கடமை. இவ்வாறு, அவர் பேசினார். திருப்பூர் இயற்கை அறிவியல் இயக்கத்தின் நிர்வாகிகள், கீதாமணி, கிருஷ்ணராஜ், முருகவேல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை