மேலும் செய்திகள்
குப்பை தரம் பிரிப்பு; மக்கள் ஒத்துழைப்பு
24-Aug-2025
தி ருப்பூரில் 'திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை சரிவர செயல்படுத்த வேண்டும்' என்று தன்னார்வ அமைப்புகள் அறைகூவல் எழுப்பத் துவங்கியுள்ளன. சில தன்னார்வ அமைப்பினர் தாங்களே களமிறங்கி, மக்களிடம் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பையை வாங்கி, இத்திட்டத்துக்கு உயிரூட்ட முயற்சித்து வருகின்றனர். அந்த வரிசையில், 'பசுமை ஆலய' திட்டம் என்ற பெயரில், கோவில்களில் இருந்து வெளியேறும் பூக்களின் இதழ் உள்ளிட்ட வீணாக வீசியெறிப்படும் பொருட்களில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் திட்டத்தை 'கான்பிடன்ஸ் விங்ஸ்' என்ற தன்னார்வ அமைப்பினர் முன்னெடுத்துள்ளனர். திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், இப்பணி துவங்கப்பட்டுள்ளது. அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திவ்யா முன்னிலையில், நிறுவனர் அபிநயா உள்ளிட்டோர், கோவில்களில் இருந்து வெளியேறும் மாலை, பூ உள்ளிட்ட மக்கும், மக்காத பொருட்களை தனித்தனியாக வெளியேற்ற, 'டிரம்'கள் வழங்கினர். குப்பை இருக்காது அபிநயா கூறியதாவது: பக்தர்கள், சுவாமிக்கு செலுத்தும் பூ, மாலையில் இருந்து ஊதுபத்தி, நறுமண பொருட்கள் தயாரிக்க முடியும். பூ, பழம் உள்ளிட்ட பிற பொருட்களில் இருந்து உரம் தயாரிக்கவும் முடியும். பூண்டி கோவிலில் தினமும், 200 கிலோவுக்கு மேல் சுவாமிக்கு மாலை சாத்தப்படுகிறது. அவை வீணான பொருளாக மீண்டும் வெளியேற்றப்படுவதை தவிர்க்கும் நோக்கில், அவற்றை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இப்பணியில் மகளிர் குழுவினர், கோவில் உழவார பணிக்கு வருவோர் என பலரும் ஈடுபடலாம். இதன் வாயிலாக, கோவிலில் இருந்து குப்பை என்ற பெயரில் எந்தவொரு பொருளும் வெளியே வராது; மாறாக, அவை மதிப்புக் கூட்டு பொருளாக பக்தர்கள் வாங்கிச் செல்வதற்கு ஏற்ற, புனிதப் பொருளாக மாறும்; இது, வேலைவாய்ப்பையும் உருவாக்கும். இத்திட்டச் செயல்பாடு அடிப்படையில் ஐ.டி.சி., நிறுவனம், சமுதாயப் பங்களிப்பு திட்டத்தில் கை கோர்க்கவும் முன்வந்துள்ளது. கோவில்கள் மட்டு மின்றி, குப்பை மேலாண்மையில் தடுமாற்றம் தென்படும் திருப்பூர் மாவட்டம் முழுக்க இப்பணியை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம். மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பிற தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து, இப்பணியை மேற்கொள்ளவும் முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினர்.
24-Aug-2025