விரிவடையும் விவசாயிகள் போராட்டம்
பல்லடம்; கோவை மாவட்டம், இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம், பெங்களூரு தேவனஹள்ளி வரை எரிவாயு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 70 கி.மீ., துாரம் விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகளின் எதிர்ப்பை மீறி குழாய் பதிப்பு பணி துவங்கியது. கோவையை தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட பகுதிகளிலும் குழாய் பதிப்பு பணி துவங்க உள்ளதை முன்னிட்டு, விவசாயிகளின் போராட்டம் விரிவடைந்து வருகிறது. பல்லடம் அடுத்த சுக்கம்பாளையம், பெருமாக்கவுண்டம்பாளையம், உகாயனுார், அலகுமலை மற்றும் காங்கயம் அருகே, பொத்தியபாளையம், வீரணம்பாளையம் ஆகிய ஆறு இடங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில், ''விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கப்படுவதால், எண்ணற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.சாலை வழியாக குழாய் பதிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒற்றை கருத்தை வலியுறுத்தியே விவசாயிகள் போராடி வருகின்றனர். கொச்சி முதல் இருகூர் வரை பைபாஸ் ரோட்டில் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ள நிலையில், இருகூரில் இருந்து முத்துார் வரை, சாலை மார்க்கத்தில் குழாய் பதிப்பதில் மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய சங்கங்கள் உட்பட, பல்வேறு கட்சிகள், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன'' என்றார்.