உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் விரிவாக்கம் அவசியம்! தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் முடிவு

அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் விரிவாக்கம் அவசியம்! தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் முடிவு

திருப்பூர்: 'அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை கூடுதல் கிராமங்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ஏராளமான கிராமங்களை உள்ளடக்கிய, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்பட்டு வருகிறது. அவற்றில், சில குளம், குட்டைகளுக்கு நீர் வருவதில்லை என்பது போன்ற சில குறைகள் இருந்தாலும், பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்பட்டு, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, அப்பகுதி முழுக்க செழிப்பாகவும் இருக்கிறது.'இந்நிலையில் திட்டத்தின் கீழ் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கும், இரண்டாம் கட்ட பணிகளை துவக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இக்கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் காங்கயம் ஒன்றியம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சங்கத்தினர் கூறியதாவது: முதலிபாளையம், நாச்சிபாளையம், கணபதிபாளையம், படியூர், தொட்டியபாளையம், பாலசமுத்திரபுதுார், தம்பிரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கோடையில் கடும் வறட்சி நிலவுவதால் இத்தொழிலை கைவிடும் நிலை கூட விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இப்பகுதிக்கென நீராதாரம் இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.எனவே, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது; அதற்கான முயற்சியை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மேற்கொண்டு வருகிறது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால், விஜயமங்கலம் மற்றும் வடக்கே உள்ள அனைத்து பகுதிகளிலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து அப்பகுதி பசுமையாக, செழிப்பாக மாறியிருக்கிறது. எனவே, அத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், இப்பகுதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்துக்கு முன்வைக்க இருக்கிறோம். கோரிக்கையை வலியுறுத்தி, நாளை (10ம் தேதி), காலை, 10:00 மணிக்கு, ஊத்துக்குளி நகரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை