குறைந்தபட்ச சம்பளம் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பு
திருப்பூர்,; தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையை தொழில்நுட்ப உதவியுடன் கையாள 'துாய்மை இயக்கம்' உருவாக்கப்படும் என, சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி அறிவித்துள்ளார்.இந்நிலையில், 'ஏற்கனவே நடைமுறையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும்' என, சி.ஐ.டி.யு., ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதன் திருப்பூர் மாவட்ட செயலாளர் ரங்கராஜ் கூறியதாவது:மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மைப்பணி, 'அவுட்சோர்சிங்' முறையில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசாணை (2டி), 62ன் படி, குறைந்தபட்ச ஊதிய அடிப்படையில், நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு தினசரி சம்பளமாக, 638 ரூபாய்; குடிநீர் பணியாளர் மற்றும் ஓட்டுனர்களுக்கு, 715 ரூபாய்; மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு, தினசரி சம்பளம், 753 ரூபாய்; குடிநீர் பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு, 792 ரூபாய் சம்பளம் கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும் என கடந்தாண்டு ஜூன் மாதமே, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.இதைக்காட்டிலும் குறைந்த சம்பளமே துாய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன், பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும், பி.எப்., தொகை, நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகை ஆகியவை தொழிலாளர்களின் பி.எப்., கணக்கில் சரிவர வரவு வைக்கப்படுவதில்லை. முதலில் இதுபோன்ற குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.