உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏற்றுமதி தொழில் போட்டியை சமாளிக்க வட்டி சமன்படுத்தும் திட்டம் நீட்டிப்பு அவசியம்

ஏற்றுமதி தொழில் போட்டியை சமாளிக்க வட்டி சமன்படுத்தும் திட்டம் நீட்டிப்பு அவசியம்

திருப்பூர்:திருப்பூர், சர்வதேச தொழில் போட்டியை சமாளிக்க ஏதுவாக, வட்டி சமன்படுத்தும் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்பது, திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.ஏற்றுமதி வர்த்தகத்தில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தக நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தரமான பொருட்களை, குறைந்த விலைக்கு வழங்கும் போது தான், வர்த்தக வாய்ப்புகளை கவர முடிகிறது. பல்வேறு காரணங்களால், நிறுவனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.செலவை கட்டுப்படுத்த இயலாத பட்சத்தில், மத்திய, மாநில அரசுகள், மானியம் வழங்கி ஊக்குவித்தால் மட்டுமே, தொழிலை பாதுகாக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஏற்றுமதியாளர்கள் நலன்கருதி, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்குவிக்கின்றன.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், தங்கள் ஏற்றுமதி ஆர்டர்கள் மீதான உற்பத்தியை துவக்க, 'பேக்கிங் கிரெடிட்' என்ற பெயரில், வங்கியில் இருந்து கடன் பெற்று, வர்த்தகம் செய்கின்றனர். அதிக வட்டி செலுத்த வேண்டியிருப்பதால், மத்திய அரசு, வட்டி சமன்படுத்தும் திட்டத்தில், மானியம் வழங்கி வட்டி சுமையை குறைக்கிறது.வட்டி சமன்படுத்தும் திட்டத்தில், 2015ம் ஆண்டு ஏப்., முதல், வட்டி சலுகை வழங்கப்படுகிறது. குறு, சிறு நிறுவனங்களுக்கு, 5 சதவீதமும், மற்ற நிறுவனங்களுக்கு 3 சதவீதமும் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம், பல்வேறு கட்டமாக நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த, 31ம் தேதியுடன் காலாவதியாகி உள்ளது.அனைத்து தரப்பு ஏற்றுமதியாளர்களுக்கும், வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மத்திய அரசு பட்ஜெட்டில், வட்டி சமன்படுத்தும் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என, ஒட்டுமொத்த ஏற்றுமதியாளர்களும், மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி வருகின்றனர்.மத்திய அரசு, ஏற்றுமதி வர்த்தகத்தை பாதுகாக்கும் வகையில், நிச்சயம் அறிவிக்கும் என நம்பிக்கையுடன் இருந்தனர். இருப்பினும், மத்திய பட்ஜெட்டில் அதுதொடர்பான அறிவிப்பு இடம்பெறவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரில், நிச்சயம் இத்திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்ற நம்பிக்கை குறையவே இல்லை.சர்வதேச சந்தைகளில், பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது. தொழிலாளர் சம்பளம் குறைவு, மின் கட்டண சலுகை என, பல்வேறு சலுகை கிடைக்கும் நாடுகள், உற்பத்தி பொருளின் விலையை குறைவாக நிர்ணயிக்கின்றன. 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதேபோல், பல்வேறு வகையில், உற்பத்தி செலவு உயர்ந்துவிட்டது. தற்போதைய நிலையில், வட்டி மானியமாக கிடைக்கும் தொகையே, நிலையான லாபம் என்று கணக்கிட வேண்டிய அளவுக்கு நிலை மாறிவிட்டது.

திட்டத்தை நீட்டிக்கணும்!

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''வட்டி சமன்படுத்தும் திட்டம் இல்லாமல், சர்வதேச சந்தைகளில் போட்டியை சமாளிக்க முடியாது. தற்போதைய சூழலில், உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்துள்ளதால், வட்டி மானியம் மட்டுமே, லாபமாக கருதப்படுகிறது. வட்டி சமன்படுத்தும் திட்டம், கடந்த டிச., 31 ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. ஏற்றுமதியாளர்களின் நிலையை உணர்ந்து, சர்வதேச சந்தைகளில் போட்டிகளை சமாளிக்கவும் ஏதுவாக, கடந்த ஜன.,1 ம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு, வட்டி சமன்படுத்தும் திட்டத்தை நீட்டிக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை