மூணாறு ரோட்டில் ஏழுமலையான் உலா
உடுமலை, ; உடுமலை - மூணாறு ரோட்டில், 'ஏழுமலையான்' என்ற ஆண் யானை உலா வருவதால், வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என வனத்துறை எச்சரித்துள்ளது.உடுமலையிலிருந்து, கேரளா மாநிலத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரோட்டில், ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில், பெரிய தந்தங்களுடன் கூடிய, 35 வயதுள்ள ஆண் யானை ஒன்று தனியாக சுற்றுகிறது. திடீரென ரோட்டில் வந்து நின்று கொள்வதால், வாகனங்களை கவனமாக இயக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.வனத்துறையினர் கூறியதாவது:கேரளா மாநில வனப்பகுதியிலிருந்து, யானை கூட்டங்கள் தமிழக வனப்பகுதிக்குள் அதிகளவு இடம் பெயர்ந்துள்ளன. இதில், 35 வயதுடைய ஆண் யானை, ஒன்று, ஏழுமலையான் கோவில் வனப்பகுதியிலேயே, கூட்டத்தை விட்டு பிரிந்து, தனியாக சுற்றி வருகிறது.இதனால், இந்த யானைக்கு 'ஏழுமலையான்' என பெயரிடப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கிறோம். உடுமலை- மூணாறு ரோட்டிலேயே பெரும்பாலும் காணப்படுகிறது. ரோட்டிற்கு யானை வந்தால், ஒன்பதாறு, சின்னாறு சோதனை சாவடிகளிலேயே, வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. யானை ரோட்டை கடந்ததும், வாகனங்கள் செல்ல அனுமதியளிக்கப்படுகிறது.இருப்பினும், வாகனங்களை தாக்கும் அபாயம் உள்ளதால், எச்சரிக்கையாக செல்லவும், வனத்துக்குள் வாகனங்களை நிறுத்தக்கூடாது, யானையை தொந்தரவு செய்யக்கூடாது, என, வாகன ஓட்டுநர்களை எச்சரித்து அனுமதிக்கிறோம்.இவ்வாறு, கூறினார்.