மடத்துக்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு வசதிகள் தேவை! நிரந்தர கட்டடமும் இல்லாததால் திணறல்
உடுமலை: மடத்துக்குளத்தில் புதிதாக அமைக்கபட்ட தீயணைப்பு நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.உடுமலை தாலுகாவில் இருந்து, 2009ல், பிரித்து மடத்துக்குளம் தாலுகா உருவாக்கப்பட்டது. இந்த தாலுகாவில், 4 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் உள்ளன. மேலும், தாலுகாவுக்குட்பட்ட பகுதியிலும், திண்டுக்கல் மாவட்ட எல்லையிலும், காகித ஆலைகள், தென்னை நார் தொழிற்சாலைகள், நுாற்பாலைகள் அதிகளவு இயங்கி வருகின்றன; கரும்பும் பிரதான சாகுபடியாக உள்ளது. அப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துகளின் போது தீயணைப்பு பணிகளுக்கு, உடுமலை, பழநியில் இருந்து வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட வேண்டியிருந்தது. அதிக தொலைவு உள்ளிட்ட காரணங்களால், குறித்த நேரத்தில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு செல்ல முடியாமல், பாதிப்பு ஏற்பட்டு வந்தது. எனவே, மடத்துக்குளம் தாலுகாவுக்கென தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இடவசதி இல்லை
கடந்தாண்டு இறுதியில், மடத்துக்குளத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, இந்தாண்டு ஜன., மாதத்தில் தற்காலிக கட்டடத்தில் நிலையம் செயல்பட துவங்கியது. இந்த நிலையத்துக்கு, ஒரு தீயணைப்பு வாகனம், ஒரு தீயணைப்பு அலுவலர், 2 முன்னணி தீயணைப்பு வீரர்கள், டிரைவர் உட்பட, 17 பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால், நிரந்தர கட்டடம் இல்லாததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது; போதிய இடவசதியும் இல்லை. தீயணைப்பு பணிகளுக்கு தேவையான தண்ணீர் நிரப்ப, அமராவதி ஆற்றுக்கு செல்ல வேண்டியுள்ளது. அவசர காலங்களில் அருகிலுள்ள கிணறுகளில் தண்ணீர் பெற்று செல்கின்றனர். இதனால், தீயணைப்பு பணிகளில், பின்னடைவு ஏற்படுகிறது. தீயணைப்பு நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் அமைத்தால், வாகனங்களுக்கு தண்ணீர் நிரப்ப தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும். அருகில், தீயணைப்பு வீரர்களுக்கு தேவையான குடியிருப்பும் கட்டினால், அவர்களும் பயன்பெறுவார்கள். தீயணைப்பு நிலையம் செயல்பட துவங்கி பல மாதங்களாகியும், நிலையத்துக்கு கட்டடம் கட்ட அரசு இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. விரைவில், நிரந்தர கட்டடம் கட்ட அரசு நிதி மற்றும் இடம் ஒதுக்கீடு செய்தால், மடத்துக்குளத்தில், தீயணைப்பு நிலையம் அமைத்ததற்கான நோக்கம் நிறைவேறும். பேரிடர் மேலாண்மைக்கான கருவிகளையும், தீயணைப்பு நிலையத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதே போல், உடுமலை தீயணைப்பு நிலையம் முன், மழைக்காலத்தில், தண்ணீர் தேங்குவது நிரந்தர பிரச்னையாக உள்ளது. நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது.