உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெருநாய்களால் நிம்மதி இழந்த விவசாயிகள்

தெருநாய்களால் நிம்மதி இழந்த விவசாயிகள்

உ டுமலை நகர பகுதியில், பிரதான ரோடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக தெருநாய்கள் சுற்றுகின்றன. வாகனங்களில் செல்பவர்களை துரத்துகின்றன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களையும் கடிக்கின்றன. ஆண்டு தோறும் நகராட்சி சார்பில்,தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பிடிக்கப்படும் நாய்கள் மூன்று நாட்கள் பராமரித்து, மீண்டும் பிடித்த இடங்களிலேயே விடப்படுகிறது. ஆண்டு தோறும், 460க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்தாலும், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. பெரிய கோட்டை, போடிபட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார் ஊராட்சிகளில், தெருநாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அங்கிருக்கும் நாய்கள் நகருக்குள் வருகின்றன. நகரம் மற்றும் புறநகர பகுதிகளில் ரோடுகளில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை உண்டு அவை பல்கி பெருகுகின்றன. உடுமலை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினமும் சராசரியாக, 40 முதல், 60 பேர் வரை, நாய்க்கடி சிகிச்சைக்கு வருவதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். பெரியகோட்டை, சின்னவீரம்பட்டி, துங்காவி, மைவாடி உள்ளிட்ட ஊராட்சிகளில், வெறிநாய்கள் கூட்டமாக சுற்றி வருவதோடு, ஆடு, மாடு, கோழி என ஆயிரக்கணக்கான கால்நடைகளை கடித்து குதறுகின்றன. விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், இது வரை ஊராட்சிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை, என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கிராமங்களில் தொல்லை உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், குடிமங்கலத்தில் 23 மற்றும் மடத்துக்குளத்தில் 11 ஊராட்சிகளும் உள்ளன. கிராமப்பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் நிம்மதி இழந்து வருகின்றனர். ஒவ்வொரு வீதியிலும் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் வலம் வருகின்றன. இரவு முழுவதும் தெருநாய்கள் கூட்டமாக சண்டையிட்டு கொள்வதால், பல பகுதிகளில் மக்கள் உறக்கமில்லாலும் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் கூறுகையில், 'தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சிகள், கால்நடைத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் ஒருங்கிணைத்து, தொடர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முடியும். கிராமங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றும் தெருநாய்களுக்கு கால்நடை மருத்துவமனை வாயிலாக சிகிச்சை அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !