உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  இறந்த கோழி அகற்றும் தொழில்நுட்பம் பண்ணையாளர்கள் எதிர்பார்ப்பு

 இறந்த கோழி அகற்றும் தொழில்நுட்பம் பண்ணையாளர்கள் எதிர்பார்ப்பு

பல்லடம்: ''இறந்த கோழிகளை அகற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்க வேண்டும்'' என, பல்லடம் கறிக்கோழி பண்ணையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பல்லடம் சுற்றுவட்டார பகுதியில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. வாரம் தோறும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தியாகி விற்பனைக்கு செல்கின்றன. பண்ணைகளில், நோய்வாய்ப்பட்டும், இயற்கையாகவும் இறக்கும் கோழிகளை முறையாக அழிக்க வேண்டும். இதற்காக, பல்லடம் - -பொள்ளாச்சி ரோடு, கிருஷ்ணாபுரம் அருகே, கோழி எரியூட்டு கலம் கடந்த காலத்தில் அமைக்கப்பட்டது. நாளடைவில், பராமரிப்புகள் இன்றி பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. இறந்த கோழிகளை அழிப்பதற்கான எந்த ஒரு முறையான நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதில்லை. மாறாக, இறந்த கோழிகள், அழுகிய முட்டைகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவை, பி.ஏ.பி., வாய்க்கால்கள், நீர்நிலைகள், பயன்பாடற்ற கிணறுகள் மற்றும் பொதுவெளியில் வீசப்படுகின்றன. இவற்றால் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்து, விவசாயம், கால்நடைகள் மட்டுமின்றி, மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இறந்த கோழிகளை அழிப்பதற்கு தொழில்நுட்ப ரீதியான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என, கறிக்கோழி பண்ணையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். வெளிநாடுகளில் நவீன நுட்பம் பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி,) செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம், பல்லடம் உட்பட, கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளை சார்ந்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. முன்பு, நுாற்றுக்கணக்கான பண்ணைகள் இருந்த சூழலில், இன்று, தொழில் விரிவடைந்து, பண்ணைகளும், உற்பத்தியும் பெருகிவிட்டன. இறந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட கோழிகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படவில்லை. எனவே, சிலர், இறந்த, நோய்வாய்ப்பட்ட கோழிகளை திறந்தவெளியில் வீசி விடுகின்றனர். வெளிநாடுகளில், இறந்த கோழிகளை முறையாக அழிக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால், இது போன்ற விதிமீறல்கள் அங்கு நடப்பதில்லை. எரியூட்டு கலம் அவசியமானது கறிக்கோழி பண்ணைகள் மட்டுமன்றி, கோழிக்கடைகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகளையும் எரியூட்ட வசதியாக, 10 டன்னுக்கும் அதிக கொள்ளளவு கொண்ட எரியூட்டு கலம் பல்லடத்தில் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால், அதன் மூலம் கிடைக்கும் கழிவு துகள்களையும், உரமாக பயன்படுத்த முடியும். மத்திய மாநில அரசுகளிடம், இது குறித்து ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோழிகளின் உற்பத்தி, நுகர்வு அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள், நிதி உதவி அளித்து எரியூட்டு கலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை