சீசனில் தேவையான உரங்கள்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
உடுமலை; மண்டல பாசனத்துக்கு சாகுபடி பணிகள் துவங்கியுள்ள நிலையில், உரங்கள் பற்றாக்குறையை தவிர்க்க வேண்டும் என குடிமங்கலம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். குடிமங்கலம் வட்டாரத்தில் தற்போது, பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கும், கிணற்று பாசனத்துக்கும், மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர் சாகுபடிக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது. இச்சாகுபடிக்கான நடவு மற்றும் விதைப்பு பணிகளின் முன், விளைநிலங்களில் அடியுரம் இட வேண்டும். பருவமழையும் பரவலாக பெய்துள்ளதால், நீண்ட கால பயிரான தென்னைக்கும் விவசாயிகள் உரமிடுவது வழக்கம். இந்த சீசனில், உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச்செய்ய, வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனனர். விவசாயிகள் கூறியதாவது: யூரியா மற்றும் தென்னைக்கு தேவையான கலப்பு உரங்கள், தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில், போதியளவு இருப்பு இருப்பதை வேளாண்துறையினர் உறுதி செய்ய வேண்டும். குறித்த நேரத்தில் உரம் கிடைக்காவிட்டால், சாகுபடியில் பாதிப்பு ஏற்படும். எனவே வேளாண்துறையினர் உரங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.