விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் குறையின்றி நடத்த வலியுறுத்தல்
உடுமலை; மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, பெயரளவிற்கு நடந்து வருகிறது. தீர்வு கிடைக்கும் கூட்டமாக நடத்த வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும், 18ம் தேதி நடைபெற உள்ளது. அறை எண்: 240ல், காலை, 10:30 மணிக்கு துவங்கி, கூட்டம் நடைபெறும்.கலெக்டர் நேரடியாக விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார். இதில், விவசாயிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்குமாறு, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.விவசாயிகள் கூறியதாவது:மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்துக்காக, மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள், காலை, 9:30 மணி முதலே, கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்து விடுகின்றனர்.காலை, 10:30 மணிக்கு குறைகேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும் கூட, 11:00 மணிக்குப்பின்னரே கலெக்டர் உள்பட வேளாண் உயர் அதிகாரிகள் கூட்ட அரங்கிற்கு வருகின்றனர்.அதேபோல், அனைத்து அரசு துறைகளிலும் மாவட்ட அளவில் முதல்நிலை அதிகாரிகள் பங்கேற்பதில்லை; இரண்டு, மூன்றாம் நிலை அலுவலர்களை அனுப்புகின்றனர். சில துறைகளில் எந்த அதிகாரியும் பங்கேற்பதில்லை.அதே போல், விவசாயிகள் வழங்கும் மனுக்களுக்கு தீர்வு காண்பதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருதோடு, அடுத்த கூட்டத்தில் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் விளக்குவதில்லை.மேலும், குறைகேட்பு கூட்டத்தை, சரியான நேரத்தில் துவக்க வேண்டும்; அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும், பிரச்னைகளை தெரிவிக்க கால அவகாசம் வழங்கவேண்டும். அனைத்து அரசு துறை அதிகாரிகளின் வருகைப்பதிவையும் உறுதி செய்ய வேண்டும்.மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, குறைகேட்பு கூட்டம் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.அதே போல், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், உடுமலையில் பல மாதங்களாக குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை.எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டங்கள் நடத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.