சிபில் ஸ்கோர் அடிப்படையில் பயிர்க்கடன்; எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்
திருப்பூர்; 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் பயிர்க்கடன் என்ற கூட்டுறவுத்துறை பதிவாளரின் அறிவிப்புக்கு, திருப்பூரில், விவசாயிகள் சங்கத்தினர் நுாதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில், விவசாயிகள் சிலர், தென்னங்கன்று, வாழை, தக்காளி, மக்காச்சோளம், மிளகாய் பயிர்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு வழங்கினர். அவர்கள் கூறியதாவது:தமிழகத்தில் ஒரு ஏக்கர் நெல் பயிரிட, 76 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், தமிழக அரசு, 36 ஆயிரம்ரூபாய் மட்டுமே பயிர்க்கடன் வழங்குகிறது. கூடுதல் செலவினங்களை சமாளிக்க, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் பெற வேண்டிய நிலை உருவாகிறது. அதோடு வியாபாரிகள், இடைத்தரகர்கள், உரக்கடை வைத்திருப்போரிட மும் கடன் பெற்று, சாகுபடி செலவினங்களை சமாளிக்கின்றனர்.விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால், விவசாயிகளால் பயிர்க்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் தான், தமிழக அரசு அவ்வப்போது பயிர் கடன்களை தள்ளுபடி செய்கிறது.பல்வேறு காரணங்களால், விவசாயிகளின் 'சிபில் ஸ்கோர்' பாதிக்கிறது. இருப்பினும், விவசாயிகள் பயிர்க்கடன்கள் பெற, கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே கை கொடுக்கின்றன. விவசாயிகளுக்கு, கிசான் கிரெடிட் கார்டு மற்றும் அனைத்து வகையான பயிர் கடன்களும், 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என, தமிழக கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவித்துள்ளார்.இதனால், விவசாயிகளால், எந்த நிலையிலும் பயிர்க்கடன் பெற முடியாது. இதனால், வேளாண் உற்பத்தியில் மிகப்பெரும் பின்னடைவு ஏற்படும். தமிழக முதல்வர், இவ்விவகாரத்தில் தலையிட்டு, அறிவிப்பை திரும்ப பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.