கருகிய நெற் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் போராட்டம்
உடுமலை; அமராவதி புதிய ஆயக்கட்டு பகுதிகளில், நெற் பயிர்கள் கருகியது குறித்து, ஆய்வு செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. மடத்துக்குளம் அமராவதி பகுதியில், நெல்லை விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகின்றனர்.இதற்கு அமராவதி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் உதவுகிறது. இந்நிலையில், நெற்பயிர்களில் திடீர் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து வேளாண்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மடத்துக்குளம் தாலுகா செயலாளர் வீரப்பன் கூறியதாவது:அமராவதி புதிய ஆயக்கட்டு பகுதியில், வேடபட்டி, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், நெல் நடவு செய்யப்பட்டது.15 முதல், 20 நாட்கள் வரை வளர்ந்த பயிர்கள், திடீரென நோய்த்தாக்குதல் காரணமாக கருகியது.உடனடியாக, மாவட்ட கலெக்டர் தலைமையில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உண்மை நிலை கண்டறிய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், வரும், 6ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்துள்ளார்.இப்பிரச்னையில், வேளாண்துறையினர் உரிய தீர்வு காண விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.