மாவட்ட வன அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்
உடுமலை; உடுமலை மாவட்ட வன அலுவலகத்தில், மலைப்பகுதியில் ரோடு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடுமலை வனச்சரகம், திருமூர்த்திமலை முதல் குருமலை வரை, பாதை அமைக்க வலியுறுத்தி மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.இந்நிலையில், ரோடு அமையவுள்ள, திருமூர்த்திமலை அடிவாரம், தளி பகுதி விவசாயிகள், உடுமலையிலுள்ள மாவட்ட வன அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வழங்கிய மனு:தளி பேரூராட்சி, மேற்குதொடர்ச்சிமலையடிவார பகுதியில், செட்டில்மென்ட் பகுதிகளுக்கு பாதை அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.ஏற்கெனவே, இப்பகுதிகளில், மனித - வன விலங்கு மோதல் அதிகரித்துள்ள நிலையில், மலையடிவார பகுதிகளில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது.மேலும், தற்போது, 5 கி.மீ., இருக்கும் சுற்றுச்சூழல் உணர் திறன் மண்டலத்தை, 10 கி.மீ.,ஆக அதிகரிக்க வனத்துறை திட்டமிட்டுள்ள நிலையில், வனத்தை வாழ்விடமாகவும், வாழ்விடத்தை வனமாக மாற்றும் முயற்சியாகும்.எனவே, சமதளத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மலைப்பகுதியில் ரோடு அமைக்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.