உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாய்க்கால் அடைப்பு சீராக்க களமிறங்கிய விவசாயிகள்

வாய்க்கால் அடைப்பு சீராக்க களமிறங்கிய விவசாயிகள்

பல்லடம் : பல்லடம் அருகே பி.ஏ.பி., கிளை வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய, பாசன விவசாயிகளே களம் இறங்கினர். உடுமலை, திருமூர்த்தி அணையில் இருந்து, நான்காம் மண்டல பாசனத்துக்காக, பி.ஏ.பி.,யில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பல்லடம்- - மங்கலம் ரோட்டில் செல்லும் பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து, 9வது மடைக்கு செல்லும் பி.ஏ.பி., கிளை வாய்க்கால், சேடபாளையம் வரை சென்று, 500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பயனளிக்கிறது. கிளை வாய்க்காலின் ஒரு பகுதியில் அடைப்பு ஏற்பட்டதால், அடுத்தடுத்து, பி.ஏ.பி.,யை நம்பியுள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால், பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தியை விவசாயிகள் தொடர்பு கொண்டனர். இதையடுத்து, அகழ் இயந்திரம், மண்வெட்டி, கடப்பாறை சகிதமாக, விவசாயிகளே அடைப்பை சரி செய்ய களத்தில் இறங்கினர். பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில், குழாய் அமைக்கப்பட்டு பி.ஏ.பி., கிளை வாய்க்கால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாகவே குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில், அடைப்பு ஏற்பட்டுள்ளதால், 500 ஏக்கருக்கு பாய வேண்டிய தண்ணீர் தடைபட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்தும் கண்டுகொள்ளாததால், நாங்களே துார்வாரும் பணியில் ஈடுபட்டோம். குழாயின் ஒரு பகுதி உடைத்து எடுக்கப்பட்டு, அடைப்புகள் நீக்கப்பட்ட பின், தண்ணீர் தடையின்றி சென்றது. ஆக்கிரமிப்புகள் காரணமாக, பி.ஏ.பி., வாய்க்கால்களை மூடுவதும், குழாய் அமைத்து, அதன் மீது கட்டடங்கள் கட்டுவதுமான செயல்கள் நடக்கின்றன. பாசனத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர், குறித்த நேரத்தில் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக, அடைப்பை நீக்குவதற்கு முன், ஏராளமான தண்ணீர் ரோட்டில் வழிந்து ஓடி வீணானது. இதேபோல், நாரணாபுரம் செல்லும் ரோட்டிலும், அடைப்பு காரணமாக, பி.ஏ.பி., தண்ணீர் ரோட்டில் வழிந்தோடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ