பல்லடம்; கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்க, விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' கட்டாயம் என்ற அறிவிப்பு, ரத்து செய்யப்பட்டதற்கு, விவசாய சங்க நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர். இது குறித்து, விவசாய சங்கத்தினர் கூறியதாவது: ஈஸ்வரன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடக பிரிவு செயலாளர்: விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று சிபில் ஸ்கோர் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இருப்பினும், சில கூட்டுறவு சொசைட்டிகள், அறிவிப்பு வெளியான பின்னரும், பயிர் கடன் வழங்க மறுத்து வருகின்றன. முழுக்க முழுக்க விவசாயிகளுக்காகத்தான் கூட்டுறவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. எனவே, சிபில் ஸ்கோர் நடைமுறை நீக்கிய பின் னும், பயிர் கடன் வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் கூட்டுறவு சொசைட்டிகளில் பயிர் கடன் வழங்க மறுக்கப்பட்டால், விவசாயிகளை திரட்டி அந்த வங்கியை முற்றுகை இடுவோம். செல்லமுத்து, உழவர் உழைப்பாளர் கட்சி, மாநில தலைவர்: கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளின் நலனுக்காக செயல்பட வேண்டும். விவசாயிகளை ஆலோசிக்காமல், அவர்களது நலனை கருத்தில் கொள்ளாமல், சிபில் ஸ்கோர் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இருப்பினும், விவசாயிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, சிபில் ஸ்கோர் நடைமுறை ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறோம். எதிர்வரும் காலங்களில் இது போன்ற எந்த ஒரு உத்தரவை பிறப்பிக்கும் முன்பாக விவசாயிகள், விவசாய சங்கம் முன்னோடிகளை கலந்து ஆலோசிக்க வேண்டும். ஈசன் முருகசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர்: கடந்த, ஜூன் 28 அன்று சிபில் ஸ்கோர் அடிப்படையில் மட்டுமே விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, விவசாயிகள் தலையில் இடியை இறக்கியது. இதனையடுத்து, விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டுறவு சங்க மாநில பதிவாளர் நந்தகுமார் விவசாயிகளுக்கு விரோதியாக செயல்பட்டு வந்ததையும் கண்டித்தோம். இதனடிப்படையில், சிபில் ஸ்கோர் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது விவசாயிகளின் ஒருங்கிணைந்த போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.