சலுகை பெற முடியாத விவசாயிகள் போராட முடிவு; அவிநாசி விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு
திருப்பூர் : அவிநாசி அருகே நடுவச்சேரி வேளாண் கூட்டுறவு சங்கத்தில், நிர்வாக குளறுபடியால், 'பயிர்க்கடன் மற்றும் கடன் தள்ளுபடி பெற முடியவில்லை' என, நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளனர். கடந்த 2019ல், அப்போதைய அ.தி.மு.க., அரசு வேளாண் கூட்டுறவு சங்க பயிர் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பயிர்க்கடன் முறையாக பெற்று திரும்ப செலுத்திய விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. ஆனால், திருப்பூர் மாவட்டம், அவிநாசி, நடுவச்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், இந்த தள்ளுபடி கிடைக்கவில்லை.விவசாயிகள் கூறியதாவது:நடுவச்சேரி சங்கத்தில், 127 பேர், 1.70 கோடி ரூபாய் பயிர்க்கடன் பெற்றிருந்தோம். அப்போதைய செயலர் விடுப்பில் இருந்ததால், கடன் தள்ளுபடிக்கான விவரங்கள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.தொடர்ந்து வலியுறுத்தி, பொறுப்பு செயலர் நியமிக்கப்பட்டார். அவரும் இந்த நடவடிக்கையில் அக்கறை செலுத்தாமல் அலட்சியமாக இருந்தார்.இதனால், அரசு அறிவித்த கடன் தள்ளுபடி எங்களுக்கு கிடைக்கவில்லை. இதை கண்டித்து, 2021 ஜன.,-பிப்., மாதங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டோம்.அப்போது, பேச்சு நடத்திய கூட்டுறவு துறை அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டோம்.பேச்சு நடத்தி நான்கு ஆண்டுகளாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், ஏழை விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, கூட்டுறவு துறை, மாவட்ட நிர்வாகம், முதல்வர் தனிப்பிரிவு என தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.பாதிக்கப்பட்ட 127 விவசாயிகளுக்கு நீதி கேட்டு, மே 30 முதல், சங்க அலுவலகம் முன் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.