யானைகளால் சாகுபடி சேதம் : கவலையில் விவசாயிகள்
உடுமலை: வன எல்லையில் முகாமிட்டுள்ள யானைகள், இரவு நேரங்களில் விளைநிலங்களில் தொடர் சேதம் ஏற்படுத்துவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனசரகத்துக்குட்பட்டது வல்லக்குண்டாபுரம் வனச்சுற்று ஆண்டியூர், ராவணாபுரம், உட்பட கிராமங்களின் விளைநிலங்கள் உள்ளன. அங்கு நீண்ட கால பயிராக தென்னை, மா மற்றும் நிலைப்பயிராக தற்போது நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வன எல்லையில், முகாமிட்டுள்ள யானைகள், இரவு நேரங்களில், விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்துகின்றன. தென்னங்கன்றுகளின் குருத்தை ருசி பார்க்கும் யானைகள், அங்கு தண்ணீர் குழாய்களையும் சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் கூறியதாவது: வன எல்லையில் இருந்து பல கி.மீ., துாரம் தள்ளி அமைந்துள்ள விளைநிலங்களிலும், வனவிலங்குகளால் தொடர் சேதம் ஏற்படுகிறது. தென்னங்குருத்துகளை யானைகள் ருசிப்பதால், மீண்டும் புதிய தென்னங்கன்றுகள் நட்டு, பல ஆண்டுகள் காய்ப்புக்காக பராமரிக்க வேண்டியுள்ளது. சேதம் குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.