கைகொடுத்த வடகிழக்கு பருவமழை வெள்ளைச்சோளம் சாகுபடி அதிகரிப்பு
உடுமலை: உடுமலை வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழை சீசனில், 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், மானாவாரியாக வெள்ளைச்சோளம் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. உடுமலை பாப்பனுாத்து, ஆண்டியூர், தேவனுார்புதுார், எரிசனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், வடகிழக்கு பருவமழை சீசனுக்கு முன்பு, பிரதானமாக வெள்ளைச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. சிறு தானியங்களுக்கு நல்ல விலை கிடைத்து வந்தததால், இச்சாகுபடியில், விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். உலர் தீவன தேவைக்காக வெள்ளைச்சோள தட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் போதிய விலை கிடைக்காதது, சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இதன் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது. பத்து ஆண்டுகள் இடைவெளிக்கு பின், நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை சீசனில் வெள்ளை சோளம் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது: வெள்ளைச்சோளத்துக்கு தேவை அதிகம் இருந்தாலும், விற்பனை வாய்ப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. அறுவடையின் போது, விலை சரிவை தடுக்க, அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும். சிறுதானிய சாகுபடி பரப்பு, உடுமலை வட்டாரத்தில் ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. இதை தடுக்க, சிறுதானிய சாகுபடிக்கு தேவையான மானிய திட்டங்களை, வேளாண்துறை வாயிலாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.