அறிகுறியுடன் காய்ச்சலா? கண்காணிப்பு அவசியம்
திருப்பூர்: 'தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன் காய்ச்சல் தொடர்ந்தால், அவர்களை மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்,' என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், அங்கிருந்து தமிழகம் வரும் வாகனங்கள், வருவோர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். பறவை காய்ச்சலுக்கு உள்ளான கோழிகள், பிற பறவை இனங்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து, மனிதர்களுக்கு எளிதில் பாதிப்பு பரவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட அறிகுறிகளுடன், காய்ச்சல் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவ கண்காணிப்புக்கு நோயாளிகளை உட்படுத்த வேண்டும். பறவைக் காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையிலான கட்டமைப்புகளை, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தலைமை அரசு மருத்துவமனை ஏற்படுத்தி தயாராக வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.