நெல் விதைப்பண்ணைகளில் வயலாய்வு தரமான விதை உற்பத்திக்கு இலக்கு
உடுமலை:மாநில அளவிலான விதை நெல் தேவையில், 70 சதவீதம் பங்களிப்பு உள்ள திருப்பூர் மாவட்டத்தில், பதிவு செய்யப்பட்ட நெல் விதைப்பபண்ணைகளில் இறுதி கட்ட ஆய்வு பணிகளில் விதை சான்றளிப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில், ஆண்டு தோறும், 70 ஆயிரம் டன் விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மாநில அளவில் நெல் விதை தேவையில், 70 சதவீதம் திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டு குறுவை பருவத்தில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், கோ-57, ஏடிடி-36, ஏடிடி-37, ஏடிடி-45, ஏஎஸ்டி-16, டிபிஎன்-5 ஆகிய குறுகிய கால ரகங்களில், 2,600 ஏக்கர் பரப்பளவில், அரசு மற்றும் தனியார் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை, திருப்பூர் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. உதவி இயக்குனர் மணிகண்டன் கூறியதாவது: தரமான சான்று பெற்ற நெல் விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், அரசு மற்றும் தனியார் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. விதைச்சான்றளிப்பு துறையில் பதிவு செய்யப்பட்டு, அலுவலர்களால் வயல் தரம் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, பூப்பருவம், முதிர்ச்சி பருவத்தில் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு, பிற ரக கலவன் இனத்தில் தேர்ச்சி பெறும் விதைப்பண்ணைகளில் மட்டுமே, விதை உற்பத்திக்கான அறுவடைக்கு அனுமதிக்கப்படும். அதன்பின், அரசு மற்றும் தனியார் விதை சுத்தி நிலையங்களில், சுத்தி பணி மேற்கொள்ளப்படும். அதில் மாதிரி எடுக்கப்பட்டு, அங்கீகாரம் பெற்ற விதை பரிசோதனை நிலையங்களில் பகுப்பாய்வு செய்யப்படும். அங்கு, பிற கலவன்கள், முளைப்புத்திறன், புறத்துாய்மை, ஈரப்பதம் ஆகியவை ஆய்வு செய்து, தேர்ச்சி பெறும், நெல் விதைக்குவியல்களுக்கு சான்றட்டை பொருத்தப்பட்டு, தரமான சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும். கல்லாபுரம், கணியூர், கடத்துார், குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விதைப்பண்ணைகளில் பூ மற்றும் முதிர்ச்சி பருவத்தில் நெற்பயிர்கள் உள்ளதால், இப்பகுதிகளில் அதிகாரிகள் குழுக்கள் வாயிலாக வயலாய்வு தீவிமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், நெல் மட்டுமன்றி, உளுந்து, தட்டை, பாசிபயிறு, நிலக்கடலை. சோளம், கம்பு போன்ற பயிர்களிலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக விதை உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு, கூறினார்.