உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடியிருப்பையொட்டி பரவிய தீ; பதட்டம்

குடியிருப்பையொட்டி பரவிய தீ; பதட்டம்

பல்லடம்; பல்லடம் அருகே, குடியிருப்பையொட்டி பரவிய காட்டுத்தீயால் பதட்டம் நிலவியது.பல்லடம் அடுத்த செம்மிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரும்பாளியில், கருடா ஹைடெக் குடியிருப்பு உள்ளது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், தொழில் நிறுவனங்கள், மில்கள், விவசாய நிலங்கள் ஆகியவை உள்ளன. நேற்று காலை, இப்பகுதியில் இருந்து திடீரென நீண்ட கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து, அருகிலுள்ள காய்ந்து கருகிய புற்கள், மரங்கள் ஆகியவற்றிலும் தீ பரவ துவங்கியது. அதிர்ச்சி அடைந்த இப்பகுதி பொதுமக்கள், குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி அணைக்க முயன்றனர். தீ கட்டுக்குள் வராததை தொடர்ந்து, பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்குள், காய்ந்திருந்த புற்களில், தீ வேகமாக பரவி பல ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீயாக மாறியது. தீ பரவலானதை தொடர்ந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்த இயலவில்லை. தீயணைப்பு படை வீரர்கள் ஒருபுறமும், பொதுமக்கள் மறுபுறமும் பச்சையான மரக் கிளைகளை உடைத்து எடுத்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பின், தீ கட்டுக்குள் வந்தது.அருகே, பஞ்சு நூல் மில் இருந்த நிலையில், இதற்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குடியிருப்பு அருகே, பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளுக்கு தீவைக்கப்பட்டது இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.---பல்லடம் அருகே பெரும்பாளியில் குடியிருப்பையொட்டி பரவிய தீ.

உயிருக்கு போராடிய உயிரினங்கள்

தீ பரவியது முழுமையான காட்டுப் பகுதி என்பதால், இங்கு ஏராளமான பறவையினங்கள், முயல், எலி உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. திடீரென பரவிய தீயால், வாழ்விடத்தை இழந்த எண்ணற்ற பறவையினங்கள் இப்பகுதியில் வட்டமிட்டு சுற்றித்திரிந்தன. முயல்கள், அணில், எலி உள்ளிட்டவையும், உயிருக்கு பயந்து இங்கிருந்து தப்பி ஓடியதை பார்க்க முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை