உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயிர் காக்கும் முனைப்புடன் முதலுதவி பயிற்சி திட்டம்

உயிர் காக்கும் முனைப்புடன் முதலுதவி பயிற்சி திட்டம்

திருப்பூர்: விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், வியாபாரிகள், போலீசார் உள்ளிட்டோருக்கு முதலுதவி பயிற்சி அளிக்க, சுகாதாரத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகளவில் விபத்து நடக்கும், 50 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வான ஒவ்வொரு இடத்திலும் வசிக்கும் போலீசார், வியாபாரிகள், வாட்ச்மேன், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள், தலா 50 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு முதலுதவி பயிற்சி வழங்க, சுகாதாரத்துறை, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. போதிய அளவில் ஆம்புலன்ஸ்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவரை அழைத்துவர விரைந்து செல்கின்றன. இருப்பினும், உடனடி முதலுதவி கிடைக்காததால், பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இந்நிலையை மாற்ற, ஆர்வமுள்ள தன்னார்வலர் மூலம் முதலுதவி அளிக்கும் முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன. இதற்காக பயிற்சி வழங்கப்படுகிறது.பயிற்சி முடித்தவர்களுக்கு அங்கீகார சான்றிதழ் மற்றும் பயிற்சிக்கான கையேடு வழங்கப்படும். அப்பகுதியில் விபத்துகள், பாம்புக்கடி போன்ற சம்பவங்களுக்கு யாரேனும், 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ளும்போது, உடனடியாக அப்பகுதி தன்னார்வலர்கள், 50 பேருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அருகில் இருப்பவர் சென்று உடனடியாக உதவிடுவர். அதனால், விபத்துகளில் சிக்குபவர்களின் உயிரிழப்பை குறைக்க முடியும்.மாநிலம் முழுதும், அதிக விபத்துகள் நடந்த பகுதிகள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜன. முதல் ஜூன் வரையிலான ஆறு மாதத்தில், 1,550 விபத்துகள் நடந்துள்ளன. இதன் மூலம், 417 பேர் உயிரிழந்துள்ளனர். தினசரி ஐந்து முதல் ஒன்பது விபத்துகள் நடக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில் அதிக விபத்து நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி நவ. மாதம் துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை