பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணியர் வெளியேற்றம்
உடுமலை; மலைத்தொடரில் பெய்த மழையால், பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; சுற்றுலா பயணியர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.உடுமலை அருகே திருமூர்த்திமலையில், மலை அடிவாரத்தில் இருந்து, 960 மீ., உயரத்தில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மேல்குருமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உருவாகும் சிற்றாறுகள் ஒருங்கிணைந்து, பஞ்சலிங்க அருவியாய் மாறுகிறது.கோடை விடுமுறையையொட்டி அருவிக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மழை பெய்துள்ளது.இதையடுத்து, பஞ்சலிங்க அருவிக்கு வரும் சிற்றாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தகவல் கிடைத்ததும், அருவி பகுதியில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த கோவில் பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து சுற்றுலா பயணியரை வெளியேற்றினர்.மேலும், அடிவாரத்தில் இருந்து, அருவிக்கு செல்லவும் தடைவிதித்தனர். இந்நிலையில், நேற்று மாலை, காட்டாற்று வெள்ளம் போல் கருநிறத்துடன் வெள்ளம் பஞ்சலிங்க அருவியில் கொட்டியது. பல மணி நேரம் இந்த நிலை நீடித்தது.கோவில் பணியாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அருவியின் நீர் வரத்தை கண்காணிக்கவும், எச்சரிக்கை செய்யவும், மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை, வளம் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், முழுவதும் நவீன தொழில் நுட்பத்தில், தானியங்கி முறையில், வெள்ள அபாய எச்சரிக்கை கருவி சில ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டது.இந்த கருவி செயல்படாமல் இருப்பதால், திடீர் வெள்ளப்பெருக்கின் போது, பணியாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.