உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெள்ளப்பெருக்கு அபாயம்; நுகர்வோர் அமைப்பு எச்சரிக்கை

வெள்ளப்பெருக்கு அபாயம்; நுகர்வோர் அமைப்பு எச்சரிக்கை

திருப்பூர்; 'நல்லாறு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதையொட்டியுள்ள குடியிருப்புகள் பாதிக்கும் அபாயம் இருக்கிறது' என, நுகர்வோர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவிநாசி மற்றும் பூண்டியை மையப்படுத்தி ஓடும் நல்லாற்றின் பல இடங்கள் புதர்மண்டிக் கிடக்கிறது. நல்லாற்றை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என, பொதுமக்களும், தன்னார்வ அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நடந்தாய் வாழி காவிரி திட்டத்தில், நல்லாற்றை துார்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, நீர்வளத்துறையினர் விளக்கமளித்துள்ளனர். இந்நிலையில், திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர்பாஷா, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: நல்லாற்றின் பல இடங்கள் புதர்மண்டிக் கிடக்கின்றன; இதனால் பெரு மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஆற்றை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ள புகுந்து சேதம் ஏற்படுத்தும் எனவும், நல்லாற்றை துார்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை துறை அதிகாரிகளுக்கு பல முறை அனுப்பியுள்ளோம். இவ்வாறு, அனுப்பப்படும் கோரிக்கை மனு மீது, 30 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்ற விதி அமலில் இருப்பினும், அதிகாரிகள் விளக்கம் அளிக்காதது வருத்தமளிக்கிறது. தற்போது நாட்டின் பல இடங்களில் பெய்து வரும் மழையால், குறிப்பாக, வட மாநிலங்களில் ஆற்றோரம் உள்ள மக்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு வருவதை அறிய முடிகிறது. எனவே, பேரிடர் பாதிப்பு ஏற்படும் முன், நல்லாற்றை சூழ்ந்துள்ள புதர்களை அப்புறப்படுத்தி, துார் வார வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !