மாணிக்காபுரம் குளத்தில் வெளிநாட்டு பறவைகள் வலசை! பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
திருப்பூர்: திருப்பூர், முதலிபாளையம், மாணிக்காபுரம் குளத்தில், உள்நாட்டு பறவைகளுடன், சில அரிய வகை வெளிநாட்டு பறவைகளும் வலசை வந்து செல்வது, பறவை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தொழிற்கூடங்களால் திருப்பூர் நிரம்பியிருப்பினும், குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் இயற்கையாய் அமைந்திருக்கின்றன. அந்த வரிசையில், நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயம் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறது. முதலிபாளையம் ஊராட்சியில் உள்ள மாணிக்காபுரம் குளத்திலும் கடந்த ஓரிரு ஆண்டுகளாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளை காண முடிகிறது. திருப்பூர் இயற்கை பாதுகாப்பு கழகத்தினர் நடத்திய பறவை நோக்கலில், உள்நாட்டு பறவைகளுடன், சில அரிய வகை வெளிநாட்டு பறவைகளும் வரத்துவங்கியிருப்பது, தெரிய வந்திருக்கிறது. இயற்கை பாதுகாப்பு கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது: மாணிக்காபுரம் குளத்தில் கடந்த இரு ஆண்டாகவே பட்டை தலை வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கிடா, நீர் காகம், மண்கொத்தி உள்ளிட்ட உள்நாட்டு பற வைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக காண முடிகிறது. தற்போது, ஆர்டிக் துருவப்பகுதிகளை வாழ்விடமாக கொண்ட செங்கால் உள்ளான் பறவை ஒன்று தென்பட்டது. இது, வலசை வருவது மிக அரிது. பச்சைக்கால் உள்ளான் உள்ளிட்ட சில 'உள்ளான்' வகை பறவையினங்களையும் காண முடிகிறது. இவ்வாறு, அவர் கூறினார். மனிதன் வாழபறவைகள் அவசியம்... 'மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது' என அடிக்கடி சொல்லி வந்தவர், இந்தியாவின் 'பறவை மனிதர்' எனப்படும் சலீம் அலி.கடந்த, 1896 நவ., 12ல் பிறந்த அவர், 90 வயது வரை வாழ்ந்தார். தன் வாழ்நாளில், 70 ஆண்டுகளுக்கு மேலாக பறவைகளை ஆராய்ச்சி செய்வதிலும், அதை ஆவணப்படுத்துவதிலும் செலவழித்தார். பறவைகளுக்கென்று மொழி, உணர்வு, வலி உண்டு என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தார். விலங்கியல் துறையின் ஒரு பிரிவான பறவையியல் துறைக்கு உயிர் கொடுத்தவர் இவர் என்பார்கள். பறவைகளை பற்றிய முறையான கணக்கெடுப்பை மேற்கொண்ட முதல் இந்தியரும் இவர் தான். இன்று பரவலாக நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் பறவைகளின் பாதுகாப்புக்கு காரணமாக விளங்கியவர் சலீம் அலி. பறவைகளின் வாழ்க்கை, செயல்பாடுகள் குறித்து புத்தகம் எழுதியுள்ளார். இவரை இந்திய பறவையிலின் பிதாமகன் என்றும் சொல்வர். - இன்று: 'பறவை மனிதர்' சலீம் அலி பிறந்த நாள் -: