மேலும் செய்திகள்
உயர் மட்ட பாலம் கட்டணும்: கிராம மக்கள் கோரிக்கை
24-Oct-2024
உடுமலை; கிராம இணைப்பு ரோட்டிலுள்ள தரைமட்டப்பாலத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒருவர் உயிரிழந்து, மூன்றாண்டுகளாகியும், பாலம் மேம்படுத்தப்படவில்லை; இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சிக்குட்பட்ட, ராமச்சந்திராபுரத்தில் இருந்து சலவநாயக்கன்பட்டி கிராமத்துக்கு, இணைப்பு ரோடு உள்ளது. இந்த ரோட்டில், உப்பாறு ஓடை குறுக்கிடும் இடத்தில், தரை மட்டப்பாலம் மட்டுமே உள்ளது.இச்சூழ்நிலையில், கடந்த, 2021, நவ., 18ல், அப்பகுதியில் பெய்த கனமழையால், உப்பாறு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அப்போது, ராமச்சந்திராபுரத்திலிருந்து இணைப்பு ரோடு வழியாக ஆட்டோவில் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்தார். தொடர் வெள்ளத்தால், தரை மட்ட பாலம் அடித்து செல்லப்பட்டு, அந்த ரோட்டில், போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு, அப்பகுதியை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, திட்ட இயக்குனர் மற்றும் குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது, 'இப்பாலத்தை, உயர் மட்ட பாலமாக மேம்படுத்த, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாகவும், விரைவில் பணிகள் துவங்கும்,' என ஒன்றிய அதிகாரிகள் தரப்பில், தெரிவிக்கப்பட்டது.மூன்றாண்டுகளாகியும் எவ்வித பணிகளும் துவங்கவில்லை. வெள்ளத்தால் தரைமட்ட பாலத்தில், பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் அடித்து செல்லப்பட்டு, அப்பகுதியில், பெரிய குழி ஏற்பட்டது.அந்த குழியை மட்டும் சீரமைத்துள்ளனர். சமீபத்தில் பெய்த தொடர் மழையால், மீண்டும் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதித்தது.மாற்றுப்பாதை இல்லாததால், அங்குள்ள விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
24-Oct-2024