நஞ்சராயன் குளத்தில் பாய்கிறது நன்னீர்
திருப்பூர்; கழிவுநீர் வெளியேற்றப்பட்ட பிறகு, நஞ்சராயன் குளத்துக்கு, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நல்லாற்றின் நிறைவாக அமைந்துள்ள, நஞ்சராயன் குளம், சுற்றுப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருந்தது. கழிவுநீர் பாய்ந்த பிறகு, குளத்து நீர் தேவையற்றதாக மாறியது. வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து செல்வதால், இக்குளம் முக்கியத்துவம் பெற்றது. தமிழகத்தின் பறவைகள் சரணாலயமாகவும் மாற்றப்பட்டுள்ளது. நஞ்சராயன் குளத்தை பார்வையிட வந்த அதிகாரிகள் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதால், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் இக்குளம் சேர்க்கப்பட்டது. குளத்தில் தண்ணீர் நிற்பதால், ஆகாயத்தாமரை அதிகம் படர்ந்துவிட்டது; அவற்றை கட்டுப்படுத்தும் வகையில், தண்ணீர் அதிக அளவு வெளியேற்றப்பட்டது. தண்ணீர் இல்லாமல் போனால், வெளிநாட்டு பறவைகள் வலசை வரும் போக்கை மாற்றிக்கொள்ளும் என, பறவை ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில், குளத்துக்கு தண்ணீர் விடப்பட்டுள்ளது. சில நாட்களாக, பவானி ஆற்று தண்ணீர், குளத்திற்குள் கரைபுரள்கிறது. கூலிபாளையம் சுற்றுப்பகுதி மக்கள் கூறியதாவது: அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் இணைக்க வேண்டுமென வலியுறுத்தினோம். அதிகாரிகள் கருணை காட்டியதால், இன்று துாய்மையான தண்ணீர் குளத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில், கழிவுநீர் தேங்கியிருந்த குளத்துக்குள், பவானி ஆற்று நீர் பாய்வது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இனிமேல், சாக்கடை நீர் குளத்தில் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும். குழாயில் கொப்பளித்து கொட்டும் தண்ணீர், படிகள் போன்ற கட்டமைப்பில் உற்சாகமாக குளத்துக்குள் ஓடுவது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதேபோல், வறண்டு கிடந்த குளங்களில் எல்லாம், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில், தண்ணீர் நிரம்புவது, விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தது போல் இருக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.