நொய்யலில் நன்னீர் பாய வேண்டும்; விவசாயிகள் முனைப்பு
பல்லடம்; ''நொய்யல் நதியில் கழிவுகள் கலப்பதை தடுத்து, நன்னீர் ஆறாக மாற்றுவதற்கான முனைப்பை மேற்கொள்வதென நொய்யல் ஆறு தண்ணீருக்கான இயக்க துவக்க விழாவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்லடம் அருகே சாமளாபுரத்தில், நொய்யல் ஆறு தண்ணீருக்கான இயக்க துவக்க விழா மற்றும் முன்னாள் விவசாய சங்கத் தலைவர் பழனிசாமி பிறந்தநாள் விழா நடந்தது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். சண்முகம் (மாநிலத் தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்): ரசாயனம் மற்றும் உள்ளாட்சிக் கழிவுகளால் மட்டுமே நொய்யல் சீர் கெட்டது. இது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காதது அரசின் தவறு. எனவே, கழிவுகள் குப்பைகளை அகற்றுவதுடன், தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். இல்லாவிடில், விவசாயிகள் களத்தில் இறங்குவோம். பழனிசாமியுடன் சந்திப்புக்கு ஏற்பாடு கந்தசாமி (சூலுார் எம்.எல்.ஏ.,): நாகரிகமாக இருந்த நதி இன்று நாதியற்று உள்ளது. இச்சூழலை மாற்ற வேண்டும் எனில், மக்கள் போராட்டமாக இது மாற வேண்டும். கொங்கு மண்டலத்துக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் பழனிசாமியை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்வேன். ரவிக்குமார் (தலைவர், கொங்கு மண்டல ஆய்வு மையம்): இந்தியாவிலேயே செத்துப்போன நதிகளில் நொய்யல் முதலிடத்தில் உள்ளது. மிக மோசமான சாக்கடையாகவே உள்ளது. நாம் இருக்கிறோமோ இல்லையோ, எதிர்காலத்தில் நொய்யல் நதிநீர் ஒரு நன்னீராக மாற வேண்டும். விவசாயிகளையும், இளைஞர்களையும் பார்க்கும்போது நொய்யல் நிச்சயமாக மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கை எழுகிறது. பானுமதி (நொய்யல் மீட்பு இயக்கம்): நொய்யல் துவங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க தவறவிட்டோம். அங்குள்ள சோலை வனங்களை அழித்து விட்டு, தேயிலை, காப்பி தோட்டங்களை அமைத்து, சுற்றுலா மையம் ஆக்கிவிட்டோம். இங்கிருந்து தான் நொய்யல் பாதிப்பு துவங்குகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். 'நொய்யல் ஆற்றை மீட்டாலே ஓட்டு கட்சிகளுக்கு உணர்த்த வேண்டும்' உலகம் முழுவதும், ஆறுகளை மீட்டெடுத்த சம்பவங்கள் எத்தனையோ உள்ளன. கங்கை, சபர்மதி உதாரணம். கழிவுகள் கலப்பதால், நொய்யல் நதிக்கரை ஓரம் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அடுத்து வரும் தேர்தலில், ஆனைமலையாறு-- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுதல் மற்றும் நொய்யல் நதியை மீட்டெடுப்பவர்களுக்கே ஓட்டு என்பதை அரசியல் கட்சிகளுக்கு புரிய வைக்க வேண்டும். - வெற்றி, செயல் தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம். இலவசங்களில் இருந்து விடுபட வேண்டும் நொய்யல் ஆறு செத்துப் போய்விட்டது. மற்ற ஆறுகள் ஐ.சி.யு.,வில் உள்ளன. நொய்யலில் மாசடைந்த தண்ணீர் முழுவதும் காவிரியில் கலக்கிறது. விழிப்புணர்வுடன் இருந்தால்தான் நொய்யலை காப்பாற்ற முடியும். ஒவ்வொரு அரசியல் தலைவரும் ஒவ்வொரு பெயரில் சுற்றுப்பயணம் செய்கின்றனர். யாருமே காவிரி குறித்து வாய் திறக்கவில்லை. அடுத்து, பெண்களுக்கு இலவச பயணம் போல் ஆண்களுக்கும் வழங்குவார்கள். மகளிர் உரிமை போல், உங்கள் உரிமை தொகையும் கொடுப்பார்கள். இதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும் என்றால், சுதந்திரத்தின் விலை மக்களுடைய விழிப்புணர்வு தான் தீர்வு. - நல்லசாமி, தலைவர், தமிழ்நாடு கள் இயக்கம்.