விநாயகர் சதுர்த்தி விழா; விதிமுறை பின்பற்ற அட்வைஸ்
திருப்பூர்; சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. வரும் ஆக., 27ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூரில், ஹிந்து முன்னணி மற்றும் பிற அமைப்புகள் சார்பில், கோவில் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை பூஜை செய்யப்பட்டு, நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படும். விநாயகர் சதுர்த்தி நெருங்கும்நிலையில், மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை: விநாயகர் சதுர்த்தி விழா, தெய்வீக கொண்டாட்டம் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலின் அழகையும், துாய்மையையும் பாதுகாக்கும் உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில், மாசுக்கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்படி சிலைகளை கரைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த, களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வைக்கவேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளை பயன்படுத்த கூடாது. சிலை அலங்காரத்துக்கு, ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல், ரசாயன பொருட்களை பயன்படுத்த கூடாது. சிலைகளுக்கு வர்ணம் பூச, இயற்கை சாயங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். சதுர்த்தி பூஜையில் பிரசாதம் வினியோகிக்க, மக்கும் தன்மையுள்ள தட்டுக்கள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவேண்டும். குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழ லுக்கு உகந்த எல்.இ.டி., பல்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நீர் நிலைகளில் மட்டுமே, சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.