அதிகாரிகளாக நடித்து லாரியை கடத்திய கும்பல் கைது
காங்கயம்: கேரளாவை சேர்ந்தவர் அனிபா, 45. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆயில் மில்களில், தேங்காய் எண்ணெயை மொத்தமாக வாங்கி கேரளாவுக்கு டேங்கர் லாரி மூலம் கொண்டு சென்று விற்று வருகிறார். அனிபாவுக்கு சொந்தமான லாரி, கடந்த 12ம் தேதி இரவு காங்கயத்தில் உள்ள ஒரு ஆயில் மில்லுக்கு தேங்காய் எண்ணெயை ஏற்றி கொண்டு திரும்பியது.சாவடிபாளையத்தில் டிரைவர் சுரேஷ், 58 என்பவர் டீ குடிக்க லாரியை நிறுத்தினார். அவ்வழியே காரில் வந்த, 5 பேர் கும்பல் தங்களை வணிகவரித்துறை அதிகாரிகள் என கூறி, லாரியில் உள்ள தேங்காய் எண்ணெய்க்கு 'இன்வாய்ஸ் பில்' கேட்டுள்ளனர். அப்போது கும்பலில் ஒருவர், திடீரென, லாரியை கடத்திச் சென்றார்.லாரி டிரைவர் காங்கயம் போலீசில் புகார் அளித்தார். காரில் வந்தது மோசடி கும்பல் என்பது தெரிந்தது. விசாரணை நடத்திய போலீசார், ஆயில் மில் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, மணி அரவிந்த், ராஜசேகர், மணிகண்டன், மயில்சாமி என, ஐந்து பேரையும் கைது செய்து, லாரியை மீட்டனர்.