மேலும் செய்திகள்
கிடைத்தது பாறைக்குழி; குப்பை பிரச்னைக்கு தீர்வு
26-Aug-2025
திருப்பூர்; மாநகராட்சி குப்பைகள் கொட்டும் பாறைக்குழி மற்றும் சுற்றுப்பகுதியில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை, நிர்வாகம் உறுதி அளித்தவாறு மேற்கொள்ள வேண்டும் என நில உரிமையாளர் தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் கடந்த இரு நாட்களாக முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டப்படுகிறது. இதற்கு அங்கு செல்லும் வாகனங்களுக்கு வழி அளித்த நில உரிமையாளர் தரப்பினர், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் கூறியதாவது: முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்குச் செல்லும் வழியும், பாறைக்குழிகளுக்கு அருகிலும் எனது பொறுப்பில் நிலங்கள் உள்ளன. இதன் உரிமையாளர் சிவகுமார் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் புதுச்சேரியில் வசிக்கின்றனர். எனவே, இந்த இடம் முழுவதும் கண்காணிக்கும் பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளனர். முந்தைய மாநகராட்சி நிர்வாகத்தின் பதவிக்காலத்தில் இங்கு தான் குப்பை கொட்டப்பட்டது. சில காரணங்களால் இது தடைப்பட்டது. எங்கள் இடம் வழியாக வாகனம் அனுமதிக்கப்படவில்லை. தற்போது இதுகுறித்து, பல மாதங்களாக மாநகராட்சி மேயர் எங்களுடன் தொடர்பு கொண்டு, குப்பை கொட்ட மீண்டும் அனுமதி கேட்டார். பாறைக்குழி உரிமையாளர்களுடன் மேயர், மாநகராட்சி கமிஷனர், உதவி கமிஷனர், சுகாதாரபிரிவினர் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்திய பின் தற்போது இந்த பணி துவங்கியுள்ளது. இதில், மாநகராட்சி தரப்பில் எங்கள் நிலம் வழியாக வாகனங்கள் செல்ல வழித்தடம் முறையாகப் பராமரிப்பது, பாறைக்குழிக்கும் எங்கள் இடத்துக்கும் இடையே பாதுகாப்பான சுற்றுச்சுவர், குப்பை கொட்டும் இடத்தில் துர்நாற்றம் வராமலும், சுகாதார கேடு ஏற்படாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடைமுறைகள் பின்பற்றுவது, அறிவியல் ரீதியாக குப்பைகள் அழிப்பது போன்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை மாநகராட்சி நிர்வாகம் முறையாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
26-Aug-2025