குப்பை விவகாரம் : ஐகோர்ட்டில் இன்று விசாரணை
திருப்பூர்:திருப்பூரில் சேகரமாகும் குப்பை கழிவுகள், பயன்பாடற்ற பாறைக்குழிகளில் கொட்டப்படுகிறது. இதற்கு பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. முதலிபாளையம் பாறைக்குழியில் கடந்த ஒரு மாதமாக குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் இணைந்து போராட்டம் நடத்தினர். இருப்பினும், குப்பை கொட்டுவது தொடர்ந்து நடந்தது. இதற்கு தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் விவசாயிகள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 10ம் தேதி நடந்த விசாரணையில், பாறைக்குழியில் குப்பை கொட்ட தடை விதித்தும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கவும் நீதிபதி லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார். விசாரணையில் காணொலி வாயிலாக ஆஜராகி, மாநகராட்சி கமிஷனர் அமித் அளித்த மாற்று ஏற்பாடுகள் குறித்த விவரங்களையும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்த உத்தரவையடுத்து, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் பாரதிராஜா தலைமையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் கடந்த இரு நாட்களாக இந்த ஆய்வை மேற்கொண்டனர். மாநகராட்சி அலுவலர்கள், வழக்கு தொடுத்த விவசாயிகள் தரப்பினர் இந்த ஆய்வின் போது உடனிருந்தனர். குப்பை கொட்டப்படும் பாறைக்குழி; அருகேயுள்ள பாறைக்குழிகள்; சுற்றுப்பகுதியில் உள்ள கிணறுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இந்த ஆய்வு குறித்த அறிக்கை இன்று நடக்கவுள்ள வழக்கு விசாரணையில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளது. --- முதலிபாளையம் பாறைக்குழியில் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். எங்கே கொட்டுவது? கடந்த மூன்று நாட்களாக பாறைக்குழிக்கு குப்பை கொண்டு செல்லப்படவில்லை. மேலும், துாய்மைப்பணியாளர் வேலை நிறுத்தம் காரணமாகவும் குப்பைகள் ஆங்காங்கே சேரத்துவங்கியது. இன்று முதல் பணியாளர்கள் வேலைக்குத் திரும்பி, குப்பை சேகரித்து அகற்றும் பணி துவங்கவுள்ளனர். இவர்கள் சேகரிக்கும் குப்பைகள் செகண்டரி பாய்ன்ட் என முன்னர் இருந்த நடைமுறையின் படி அந்தந்த வார்டு பகுதியில் உள்ள காலியிடங்களில் கொண்டு சென்று குவிக்கப்படும். இப்பிரச்னையில் இன்று நடக்கவுள்ள வழக்கு விசாரணையில் பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.